ப்ளீஸ்...! என் மகனை வாழவிடுங்க... விமர்சித்தவர்களுக்கு வேண்டுகோள் வைத்த நெப்போலியன்..!
தமிழ் சினிமாவில் 80 'ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகமான நெப்போலியன் மிக பிஸியான நடிகராக இருந்தார். அதன் பிறகு அரசியலிலும் களமிறங்கி அதிலும் வெற்றி கண்டார். பின்னர் அவரின் மூத்த மகன் தனுஷுக்கு தசைசிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கே தொழில், விவசாயம் என செய்து வரும் நெப்போலியன் சமீபத்தில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
அதற்காக பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் ஜப்பானில் நடைபெற இருப்பதாகவும், இதனால் அவர்கள் குடும்பத்துடன் ஜப்பான் சென்று இருப்பதாகவும் தகவல் வெளியானது. தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதற்காக கப்பலில் அழைத்து சென்று இருக்கிறார்கள். நெப்போலியன் மகன் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அவருக்கு ஏன் இப்போது திருமணம் என்று இஷ்டத்திற்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்து வந்தார்கள். அதிலும் பயில்வான் ரங்கநாதன் போன்ற பலரும் தனுஷால் ஒரு பெண்ணின் வாழ்க்கை நாசமாக போகிறது என்று எல்லை மீறி பேசியிருந்தார். இதற்கெல்லாம் நெப்போலியன் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன் வைத்திருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'எனது அன்பு நண்பர்களே, உலகம் எங்கும் வாழும் தமிழ் சொந்தங்களே.. எங்களது மூத்த மகன் தனுஷின் 8 வருடக் கனவு. இந்தியாவில் பிறந்தாலும் சூழ்நிலை காரணமாக உலகத்தின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றோம். இப்போது ஜப்பானுக்கு பயணம் செய்ய ஒரு வருடம் திட்டமிட்டு, ஆறு மாதங்களாக அதற்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு மாதமாக பயணம் செய்து இப்போது தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கின்றோம். தனுஷுக்கு இது எல்லையில்லா மகிழ்ச்சி. இது எங்களுக்கு அளவில்லா மனநிறைவை கொடுக்கின்றது. சில விஷயங்களை உங்களிடம் பகிர ஆசைப்படுகின்றேன்.
எங்கள் வாழ்வை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம் பெற்றோரின் கனவுக்காகவும் நமது கனவுகாகவும் நமது பிள்ளைகளின் கனவுகாகவும் அவசியம் வாழவேண்டும். அப்படி வாழ்ந்து தான் பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும். வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்ந்து பார்ப்போம். அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. இந்த உலகத்துக்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை, எதையும் கொண்டு போவதில்லை. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் உள்ளது.
உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கின்ற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஒரு பக்கச் சொல் ஒரு யானை பலம். எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள். அது ஒரு நாள் உங்களுக்கே திரும்பிவிடும். எண்ணம் போல் தான் வாழ்க்கை, நன்றாக யோசிங்கள். சிந்தனையை செயல்படுத்துங்கள்' என்று தெரிவித்திருக்கின்றார்.