Rajini Kamal: சினிமாவுக்கு முழுக்கு போடும் ரஜினி!.. இதுதான் கடைசிப் படமாம்!.. சோகங்கள்!..
 
                                    
                                பெங்களூரில் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து, அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து, நண்பர்களின் உதவியுடன் திரைப்பட கல்லூரியில் படித்து, அங்கு இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகம் கிடைத்து அவரின் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கி சினிமாவில் உச்சம் தொட்டவர்தான் ரஜினிகாந்த். தனக்கென ஒரு தனி ஸ்டைல் தனி பாணியை கடைப்பிடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். துவக்கத்தில் நண்பர் கமலுடன் இணைந்து படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்கத் தொடங்கி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்.
ரஜினி நடிப்பில் வெளியான 95 சதவீத படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம்தான். இத்தனை வருடங்களாகியும் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இன்னமும் ரஜினியிடம்தான் இருக்கிறது. இடையில் அரசியலுக்குப் போகும் எண்ணம் வந்து அது தொடர்பாக பலரிடம் ஆலோசனை செய்து அதன்பின் உடல் நிலையை காரணம் காட்டி அதிலிருந்து விலகினார். அதன்பின் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே இளைய தலைமுறைய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த பல வருடங்களாகவே ரத்தம் திறக்கும் ஆக்சன் படங்களில் நடித்து வந்ததால் சலிப்படைத்த ரஜினி ஜெயிலர் 2-வுக்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு ஜாலியான கலகலப்பான குடும்ப காமெடி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் நண்பர் கமல் தயாரிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ள படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்னவெனில் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் இருக்கிறாராம் ரஜினி. கமலுடன் ஆரம்பித்த ரஜினியின் சினிமா பயணம் கமலுடனே முடிவது செண்டிமெண்டாக பார்க்கப்படுகிறது. சுந்தர்.சி படம் 2026 பிப்ரவரி துவங்கவிருக்கிறது. 2026 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். நெல்சன் படம் 2027ல் துவங்கவிருக்கிறது.
ரஜினி சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பதை அவரின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் ரஜினிக்கு இப்போது 74 வயது ஆகிறது. தனது 76வது வயதில் ரஜினி சினிமாவிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

