இளையராஜாவ விட்டு எல்லாரும் போனாங்க!.. என்னையும் சேர்த்து.. ஃபீல் பண்ணி பேசிய ரஜினி…
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதன்பின் கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் சினிமா இவரின் இசையை மட்டுமே நம்பி இருந்தது. எங்கு திரும்பினாலும் அவரின் பாடல்கள் ஒலித்தது. ரஜினி கமல், மோகன், விஜயகாந்த், ராமராஜன் என பல நடிகர்களும் தங்களின் படங்கள் வெற்றிக்கு இளையராஜாவின் இசையை நம்பி இருந்தார்கள்.
படத்தை எடுத்து முடித்துவிட்டு ‘பாதி வேலை முடிந்து விட்டது.. மீதி வேலையை இளையராஜா பார்த்துக் கொள்வார்’ என அப்போது இருந்த எல்லா இயக்குனர்களும் நம்பினார்கள். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் திரைப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
அதேநேரம் மாற்றங்களை தடுக்க முடியாது என்பது போல் 90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட பல புது இசையமைப்பாளர்கள் வந்தார்கள். அதன்பின் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனாலும் அவரிடம் செல்லும் இயக்குனர்களுக்காக இப்போதும் பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா.
இந்நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய ரஜினி ‘எப்போதும் வெற்றி மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காது. தோல்வியும் வர வேண்டும். தோல்வி வந்தால்தான் வெற்றியின் அருமை புரியும். சினிமாவில் உச்சத்தில் இருந்தார் ராஜா. ஒரு கட்டத்தில் புதுப்புது இசையமைப்பாளர்கள் வருகிறார்கள்.. ராஜாவை வைத்து கோடி கோடியாக சம்பாதித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், என்னையும் சேர்த்து நடிகர்களும் அவரை விட்டுப் போகிறார்கள்.
ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. அதே ஆறரை மணிக்கு அவரின் கார் ஸ்டுடியோவுக்கு போகும். அதே ஆர்மோனியம் வாசிக்கும்.. அதே இசையை அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவரின் சகோதரர் பாஸ்கர், அவரின் மனைவி ஜீவா, அவர் மிகவும் நேசித்த அவரின் மகள் பவதாரணி ஆகிய எல்லோரும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். ஆனாலும் அவர் எதற்கும் கலங்கி நின்றதில்லை. அவர் இசை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது நம் உலகத்திற்கு வருகிறார்.. அவ்வளவுதான். பிரசாத் ஸ்டூடியோவில் அவரை இசையமைக்க கூடாது என சொன்னார்கள்.
அதே சாலையில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி அதை ஸ்டுடியோவாக மாற்றி இளையராஜா என போர்டு வைத்தவர் அவர். இளையராஜாவைப் போல ஒரு மனிதரை பார்க்க முடியாது அவர் நீடூடி வாழ வேண்டும்’ என ரஜினி அவரை வாழ்த்தி பேசினார். மேலும், இளையராஜாவின் சுயசரிதை திரைப்படத்தை பார்க்க நானும் ஒரு ரசிகனாக ஆவலாக இருக்கிறேன். என்னை விட்டால் நானே அதற்கு திரைக்கதை அமைத்து விடுவேன்’ எனவும் பேசினார் ரஜினி.
