ஒரு படம் ரிலீஸான அது எல்லாருக்கும் சொந்தம்!.. ரிவ்யூ சர்ச்சை குறித்து பதில் சொன்ன சித்தார்த்!..

by Murugan |
siddharth
X

siddharth

Actor Siddharth: சினிமா எப்போது துவங்கியதோ அப்போதே விமர்சனமும் வந்துவிட்டது. 1950 முதல் 2010 வரையிலும் கூட விமர்சனம் என்பது வார இதழ்களிலும், செய்தி பத்திரிக்கைகளிலும் வெளிவரும். குறிப்பாக ஆனந்த விகடன் இதழ் விமர்சனம் எல்லோராலும் கவனிக்கப்படும். ஒரு படத்திற்கு இந்த இதழ் அதிக மதிப்பெண் கொடுத்தால் அதையே போஸ்டர்களில் விளம்பரமாக பயன்படுத்துவார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் எல்லோர் கையிலும் செல்போன் மற்றும் இண்டர்நெட் வசதிகள் வந்துவிட்டது. யுடியூப் மிகவும் பிரபலமானதும் சினிமா மீது ஆர்வமுள்ள சிலர் புதிய படங்கள் பற்றி பேசி அவர்களின் கருத்தை சொல்லி வீடியோவை வெளியிட்டார்கள்.

அது பிரபலமாவதோடு, அதிகம் பேர் வீடியோவை பார்க்கும் போது அதில் வருமானமும் வருவதால் இப்போதும் பலரும் அதை செய்ய துவங்கிவிட்டார்கள். அதில், புதிய படங்களை தாறுமாறாக கிழித்து தொங்கவிடும் புளூசட்ட மாறன் போன்றவர்களின் விமர்சன வீடியோ ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. ஒருபக்கம், யுடியூப் மட்டுமில்லாமல் படம் பார்க்கும் ரசிகர்கள் டிவிட்டர், முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் படத்தை பற்றிய கருத்துக்களை பதிவிடுகிறார்கள்.


புதிய படம் வெளியாகும் போது முதல் அல்லது சிறப்பு காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் ‘படம் எப்படி இருக்கு?’ என யுடியூப் சேனல்களை சேர்ந்தவர்கள் தியேட்டருக்கே போய் கேட்க துவங்கிவிட்டார்கள். படம் நன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், படம் மொக்கையாக இருக்கிறது என அதிக ரசிகர்கள் சொன்னால் அது படத்தின் வசூலையே பாதிக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா படம் அப்படித்தான் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனால் அப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதற்கு யுடியூப் சேனல்கள்தான் காரணம். இனிமேல், புதிய படங்கள் வெளியாகும்போது அவர்களை தியேட்டரில் அனுமதிக்க மாட்டோம் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்தது.

ஆனால், படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். ஒரு நல்ல படத்தை யுடியூபில் வரும் தவறான விமர்சனங்கள் காலி செய்துவிட முடியாது. படம் பார்ப்பவர்களுக்கு படம் எப்படி இருக்கிறது என சொல்ல உரிமை உண்டு என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து சொனனார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி நடிகர் சித்தார்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் சொன்ன அவர் ‘அவர்கள் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். அதில் நான் தலையிட முடியாது. அதற்கு என்னால் கருத்து சொல்லவும் முடியாது. ஒரு படம் வெளியானவுடன் அது எல்லோருக்கும் சொந்தம். பணம் கொடுத்து படம் பார்க்கிறார்கள். அது பற்றி சொல்ல கருத்து சுதந்திரம் உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்கள்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story