விஜய் சேதுபதி மகனை நேரில் அழைத்து வாழ்த்திய விஜய்!.. வைரல் போட்டோ!...

Phoenix: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறியிருக்கிறார். ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது இவரின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். இப்போது பீனிக்ஸ் வீழான் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறியிருக்கிறார். இந்த படத்திற்காக குண்டான உடலை கடுமையான வொர்க் அவுட் செய்து உடம்பை முறுக்கேற்றியிருக்கிறார்.

பீனிக்ஸ் படத்தை பல படங்களிலும் சண்டை காட்சிகளை அமைத்த அனல் அரசு இயக்கியுள்ளார். எனவே, இந்த படம் பக்காவான ஒரு ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்களிலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா சேதுபதி பபிள்கம் மென்றுகொண்டு நின்றதை சிலர் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். சூர்யா சேதுபதி ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுவதாக சிலர் பொங்கினார்கள். அவர்களோடு விஜய் சேதுபதியை பிடிக்காதவர்களும் சேர்ந்து வன்மத்தை கக்கினார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் சூர்யாவை நேரில் அழைத்து அவருக்கு வாழ்த்து சொல்லுயிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சூர்யா சேதுபதி ‘நன்றி விஜய் சார்.. நீங்கள் சொன்ன கனிவான வார்த்தைகள்.. உங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.. என்னுடைய இந்த பயணத்தில் உங்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. இதை மறக்கமாட்டேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் விஜய் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் தொடர்ச்சியாகவே இப்போது விஜய் சேதுபதியின் மகனை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.