சினிமாவுக்கு No.. ஸ்போர்ட்ஸ்னா Ok.. பேட்டி கொடுப்பதன் காரணம் சொன்ன ஏகே!..

by MURUGAN |
ajith
X

நடிகர் அஜித் கடந்த பல வருடங்களாகவே ஊடகங்களை சந்திப்பது இல்லை. மற்ற நடிகர்களை போல தனது படம் வெளியாகும் போது செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்துவது இல்லை. ரசிகர்களை சந்திப்பது இல்லை. தனது படம் வெளியாகும் போது அது தொடர்பான பூஜையிலோ, புரமோஷன் நிகழ்ச்சிகளிலோ கூட அவர் கலந்துகொள்வது இல்லை. படம் ஹிட் அடித்து சக்சஸ் மீட் நடந்தாலும் அதில் அஜித் இருக்கமாட்டார்.

தனது படத்திற்கு அது தேவையில்லை. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என அவர் நினைக்கிறார். மேலும் தன்னை தனது படங்களில் மட்டும் ரசிகர்கள் பார்த்தால் போதும் எனவும் அவர் நினைக்கிறார். அதோடு, இதையெல்லாம் அவர் செய்யாமல் இருப்பதன் பின்னணியில் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் காரணம் என சொல்லப்படுகிறது.

அஜித் தனது படத்துக்காக செய்தியாளர்களை சந்தித்தது தனது அசல் படத்தின் புரமோஷனுக்காகவே. அது நடந்து 15 வருடங்கள் ஆகிறது. அஜித் தனது படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தும் அஜித் அதை ஏற்கவில்லை.


சினிமாவில் நடித்தாலும் கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் அதை தொடர்ந்து செய்து வருகிறார். பொதுவாக 6 மாதங்களில் ஒரு படம் நடித்து 150 கோடி சம்பாதிக்க வேண்டும் என மற்ற நடிகர்கள் நினைக்கையில் அஜித்தோ கடந்த பல மாதங்களாகவே மோட்டார் ரேஸில் கலந்துகொண்டு கார் ஓட்டி வருகிறார். அஜித்தின் டீமுக்கு அவரே கேப்டனாகவும் இருக்கிறார்.

அஜித் பேட்டி கொடுப்பதில்லை என்றாலும் துபாயில் மோட்டார் ரேஸில் கலந்துகொண்ட பின் துபாயில் உள்ள ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். பெரும்பாலும் அதில் மோட்டார் ரேஸ் பற்றி மட்டுமே அவர் அதிகம் பேசி வருகிறார். இடையில் ‘அக்டோபர் மாதம் புதிய படத்தில் நடிக்க துவங்குவேன். இன்னும் 6 வருடங்கள் என்னை நம்பி பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். சிறந்த படங்களை ரசிகர்களுக்கு கொடுப்பேன்’ என சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், ‘சினிமா தொடர்பான ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுக்காத நீங்கள் ஸ்போர்ட்ஸ் தொடர்பான பேட்டிகளை மட்டும் எப்படி கொடுக்குறீர்கள்?’ என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு ‘இந்தியாவில் திரைப்படங்கள், அரசியல் மற்றும் கிரிக்கெட் தொடர்பான ஊடகங்களே அதிக கவனம் பெறுகிறது. ஆனால், மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகங்கள் அதிக கவனத்தை பெறுவது இல்லை. அதனால்தான் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டி கொடுக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார் ஏகே.

Next Story