10 மாதம் சினிமாவுக்கு லீவு விடும் அஜித்!.. அவர் பிளானே இதுதான்!....
Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக நடிக்க துவங்கி காதல் கோட்டை, வான்மதி போன்ற காதல் கதைகளில் மட்டுமே நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறியவர் அஜித்.
இவருக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. பைக் மற்றும் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பைக் மெக்கானிக் கடையில் அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறார். பைக்கை எப்படி பழுது பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதுதான் அவரின் ஆர்வமாக இருந்திருக்கிறது.
ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஆர்வம் வர சில விளம்பர படங்களில் நடித்து அமரவதி படத்தில் அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்க்கு அடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
சினிமாவில் நடிப்பது பிடிக்கும் என்றாலும் பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, புதிய இடங்களுக்கு செல்வது, புதிய அனுபவங்களை பெறுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். பொதுவாக சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் இப்படியெல்லாம் செய்யவே மாட்டார்கள். ஆனால், அஜித் இதில் விதிவிலக்கு. அவரை பார்த்து பொறாமைப்படும் நடிகர்களும் இருக்கிறார்கள்.
ஏற்கனவே பைக்கில் உலகை சுற்றி வந்த அஜித் விரைவில் கார் ரேஸிலும் கலந்துகொள்ளவிருக்கிறார். ஏற்கனவே, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சினிமா, கார் ரேஸ், பைக் ரேஸ் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில், அஜித்தை பற்றி ஒரு புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் அஜித் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தவிருக்கிறாராம். அதேநேரம், அஜித்தின் ரசிகர்கள் ஏமாந்து போக மாட்டார்கள். ஏனெனில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியானால் குட் பேட் அக்லி படம் மே மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் டப்பிங் வேலைகளை முடித்து கொடுத்துவிட்டு கார் ரேஸுக்கு போகிறார் அஜித். அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு 2025 ஆகஸ்டு மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.