எந்த நடிகராவது பேசுனாங்களா? விஜய்க்காக கரூர் சம்பவம் பற்றி மனம் திறந்த அஜித்
கரூர் சம்பவம் பற்றி முதன் முறையாக மனம் திறந்திருக்கிறார் நடிகர் அஜித். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அஜித் அளித்த பேட்டிதான் இன்று சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகின்றது. அதில் தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கை பற்றியும் கார் ரேஸ் குறித்தும் குடும்பத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் தமிழ் பேசவே திணறினார்.
ஆனால் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு தமிழை நல்ல முறையில் கற்றுக் கொண்டேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் அஜித் கரூர் சம்பவம் பற்றியும் பேசியிருக்கிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்ற போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அது விஜய்க்கும் அவருடைய கட்சிக்கும் பெரிய நெருக்கடியை தந்தது.
பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். திரையுலகில் இருந்த சில பேரும் விஜய்க்கு எதிராக பேசி வந்தனர். விஜய்க்கு ஆதரவாகவோ அல்லது கரூர் சம்பவம் பற்றியோ எந்த நடிகர்களும் வாய் திறக்கவில்லை. ஆனால் ரஜினி மற்றும் கமல் மிகுந்த வேதனையளிக்கிறது என்று மட்டும் அறிக்கை விட்டிருந்தனர். இது விஜய்க்காக கூடிய கூட்டம், அவர் வந்ததால்தான் இப்படி நடந்தது என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் இதற்கு ஒரு நபர் மட்டும் பொறுப்பேற்க முடியாது என மிகவும் தைரியமாக பேசியிருக்கிறார் அஜித். அதாவது இதில் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது. ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம். ஆனால் உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என அந்த பேட்டியில் பேசியுள்ளார் அஜித்.
விஜய்க்காகவோ அல்லது எப்படி அஜித் இதை பேசியிருந்தாலும் இதுவரை இப்படி ஒரு ஸ்டேட்மெண்டை எந்த நடிகரும் கூறவில்லை. குறிப்பாக முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரம் பற்றி பேசிய முதல் நடிகராகவும் அஜித் இருக்கிறார். அவரின் இந்த தெளிவான விளக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
