நீங்க சொன்னது தப்பே இல்ல!. ஏன் மன்னிப்பு?!.. கார்த்திக்கு ஆதரவாக களமிறங்கும் ஆந்திர ரசிகர்கள்!...

Karthi: திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரித்து பக்தர்களுக்கு கொடுக்கப்படும் லட்டை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுகொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் புகார் சொன்னார். இந்த தவறு முந்தைய முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் நடந்ததாகவும் அவர் சொன்னார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதை ஆதாரப்பூர்வமாக விளக்க முடியும் என பதிலடி கொடுத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால், லட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்.

கோவிலின் புனிதத்தை ஜெகன் மோகன் ரெட்டி அரசு கெடுத்துவிட்டதாகவும் அதை போக்குவதற்காக வெங்கடேச பெருமானுக்கு 11 நாள் விரதம் இருக்க போவதாக அறிவித்தார். கடவுளிடம் மன்னிப்பு கோரி பரிகார சபதம் எடுத்து 11 நாட்கள் விரதம் எடுக்க தீர்மானம் எடுத்திருக்கிறேன். 11 நாட்கள் பரிகார தீட்சை முடிவில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்பு கேட்டு இறைவனிடம் பரிகார தீட்சை நிறைவு செய்வேன் என சொல்லியிருந்தார்.

ஆனால், அப்படி எந்த தவறும் நடக்கவில்லை, சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி மீது அபாண்டமாக புகார் சொல்கிறார் என நடிகை ரோஜா சொல்லியிருந்தார். ஒருபக்கம் நடிகர் பிரகாஷ் ராஜோ ‘தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு பதட்டத்தை உண்டாக்கி இதை ஏன் தேசிய பிரச்சனையாக மாற்றுகிறீர்கள்/’ என நடிகர் பிரகாஷ் ராஜ் கேட்டிருந்தார்.

ஒருபக்கம், ஆந்திராவில் ஒரு விழாவுக்கு போன கார்த்தியிடம் லட்டு பிரச்சனை பற்றி ஆங்கர் கேள்வி கேட்க ‘லட்டு பற்றி பேசக்கூடாது.. அது சென்சிபிள் மேட்டர்’ என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் கார்த்தி. இதைத்தொடர்ந்து கார்த்தி பேசியதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார்.

எனவே, அதற்காக டிவிட்டரில் மன்னிப்பு கேட்டிருந்தார் கார்த்தி. இதைத்தொடர்ந்து ‘நீங்கள் எந்த தவறான கருத்தையும் சொல்லவில்லை. அப்படி இருக்க நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? என ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். விஜே கேள்வி கேட்டு அது கார்த்திக்கு பிரச்சனையாக மாறிவிட்டது’ என்றும் பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

Admin
Admin  
Related Articles
Next Story
Share it