Anjaan: அஞ்சானில் பல கோடி லாபம்!.. ஆடிப்போன லிங்குசாமி!.. ரி-ரிலீஸின் பின்னணி!...

தமிழ் சினிமாவில் பரபரப்பான ஆக்சன் கதைகளை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய படம்தான் அஞ்சான். இந்த படத்தை லங்குசாமியே தயாரித்தும் இருந்தார். சமந்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான இந்த திரைப்படம் 2014ம் வருடம் வெளியானது.
‘ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல சூர்யாவுக்கு அஞ்சான் படம் அமையும்.. நான் இதுவரை கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்துல இறக்கி இருக்கேன்’ என்றெல்லாம் புரமோஷன் விழாவில் பேசினார் லிங்குசாமி. ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டதோடு, சூர்யாவுக்கு பில்டப்பான காட்சிகளை வைத்திருந்ததால் அஞ்சான் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
எனவே சமூக வளதங்களில் படத்தை ட்ரோல் செய்தார்கள். நெகட்டிவ் விமர்சனம் வேகமாக பரவியதால் ‘நெகட்டிவாக விமர்சிக்காதீர்கள்’ என சூர்யா கோரிக்கை வைத்தும் அது நிற்கவில்லை. விக்ரம் படத்தில் ரோலக்ஸாக இரண்டு நிமிடம் வந்த சூர்யாவை அப்படி ரசித்த ரசிகர்கள் அஞ்சான் படத்தில் அதே சூர்யாவை கேங்ஸ்டராக ரசிக்கவில்லை.
அந்த படத்திற்கு பின் இதுவரை லிங்குசாமி ஹிட் கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட சினிமாவை விட்டு விலகியே இருக்கிறார் லிங்குசாமி. இந்நிலையில்தான் அஞ்சான் படத்தை விரைவில் அவர் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. ஏனெனில் வெற்றி பெற்ற ஒரு படத்தைதான் ரீ-ரிலீஸ் செய்வார்கள். ஆனால் ‘ஓடாத படத்தை எப்படி?’ என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அஞ்சான் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்டுமைன் மனிஷ் என்கிற விநியோகஸ்தர் வாங்கி இருந்தார் அவர் அஞ்சான் படத்தை வேறு மாதிரி ரீ-எடிட் செய்து தனது youtube தளத்தில் 2 வருடங்களுக்கு முன்பு வெளியிட அது ரசிகர்களுக்கு பிடித்து போய் 22 மில்லியன் பேர் யூடியூப்பில் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள்.
அதில் அவருக்கு பல கோடி லாபமும் கிடைத்திருக்கிறது. அந்த வெர்ஷனை பார்த்து அசந்துபோன லிங்குசாமி ‘இது நமக்கு தோன்றவில்லையே’ என யோசித்து அதன் அடிப்படையில் அஞ்சான் படத்தை ரீ-ரிலீஸை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அஞ்சான் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்கிற அப்டேட் விரைவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.