விஷால் கண்ண புடிச்சு நான் தச்சிட்டேனா?.. பிரஸ் மீட்டில் நக்கலாக பதில் சொன்ன பாலா..!
Director Bala: தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான படைப்புகள் மூலமாக தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் இயக்குனர் பாலா. சேது திரைப்படத்தில் தொடங்கி கடைசியாக அவர் இயக்கிய வணங்கான் திரைப்படம் வரை ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் இது பாலா திரைப்படம் என்பது தனியாக தெரியும். பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.
சினிமாவில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. சினிமா வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி அடிமேல் அடி விழ தற்போது வணங்கான் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கின்றார். முதலில் சூர்யாவை வைத்து தொடங்கப்பட்ட வணங்கான் திரைப்படம் பின்னர் பல்வேறு பிரச்சினை காரணமாக சூர்யா அப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான வணங்கான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படங்களுடன் வெளியான கேம் சேஞ்சர், மரகதராஜா, காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா போன்ற திரைப்படங்களில் வணங்கான் மற்றும் மதகஜராஜா திரைப்படம் தான் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ஒரு நல்ல திரைப்படமாக அமைந்திருக்கின்றது.
அதிலும் 12 வருடங்களுக்கு பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றது. சமீபத்தில் சென்னையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று சென்னையில் வணங்கான் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலா அருண் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலாவிடம் விஷால் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதாவது சமீப நாட்களாக நடிகர் விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதற்கு காரணம் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மாறு கண் வேடத்தில் விஷால் நடித்திருந்ததால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக போதைக்கு அடிமையாகி இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிவிட்டார் என்ற விமர்சனங்கள் முன் வந்தது.
அது மட்டும் இல்லாமல் இயக்குனர் பாலா விஷாலின் கண்ணே பிடித்து தைத்து விட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இது குறித்து இந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாலாவிடம் விஷாலின் மதகஜராஜா திரைப்படம் வெற்றி பெற்றிருக்கின்றது என்று கூறப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா விஷாலுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். மேலும் விஷாலின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என்று விமர்சனங்கள் வருகின்றது.
அது குறித்து உங்கள் பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதைப்பற்றி பேசிய பாலா இதற்கு நான் மருத்துவ சான்றிதழ் தான் வாங்கி கொடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அவரின் கண்ணை இழுத்து வைத்து நான் தைத்து விட்டதாக அது எப்படி கண்ணைப் பிடித்து தைக்க முடியும். இதெல்லாம் அவங்க அவங்களுக்கு தோன்றும் விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறியிருந்தார்.