Bison: நான் வாரிசு நடிகர்தான்!.. ஆனா!.. நெப்போட்டிசம் கேள்விக்கு துருவ் நச் பதில்!...

சினிமாவில் சுலபமாக சுலபமாக வாய்ப்புகள் கிடைத்து விடாது. அதேநேரம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் ஆகியோர்களின் வாரிசாக இருந்தால் சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடும். இப்போது சினிமாவில் இருக்கும் சூர்யா, கார்த்தி, விஷால், சிம்பு, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி உள்ளிட்ட அனைவருமே வாரிசு நடிகர்கள்தான்.
அதேநேரம் வாரிசுகளாக இருப்பதால் மட்டுமே அவர்கள் நிலைத்து நின்றுவிட முடியாது. அவர்களுக்கு அமைகின்ற படங்கள், சினிமாவில் அவர்கள் போடும் உழைப்பு, அவர்கள் நடிக்கும் படங்களின் ரிசல்ட் ஆகியவற்றை பொறுத்தே அவர்களின் சினிமா கெரியர் அமையும்.
வாரிசாக இருப்பதால் வாய்ப்புகள் கிடைத்தாலும் வெற்றி படங்களை கொடுத்தால் மட்டுமே சினிமாவில் நீடித்து நிற்க முடியும். மேலே சொன்ன எல்லோருமே அப்படி தங்களை நிரூபித்து காட்டி கோலிவுட்டில் பெரிய நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.அதேநேரம் வாரிசு நடிகராக சினிமாவுக்கு சுலபமாக வந்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் பலரும் இருக்கிறார்கள், சிபிராஜ், சாந்தனு என இன்னும் நிறைய சொல்லலாம்.
அப்படி கோலிவுட்டில் வாரிசு நடிகராக களம் இறங்கியவர்தான் துருவ் விக்ரம். சியான் விக்ரமின் மகனான இவர் தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம் நடிக்க தொடங்கினார். அதன்பின் விக்ரம் நடித்த மகான் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தார். தற்போது மாரி செல்வராஜின் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்திருக்கிறார்.
பைசன் படத்தையே தனது முதல் படமாக கருதுவதாக ஏற்கனவே பேசி இருந்தார் துருவ். இந்த படத்தில் கபடி வீரராக கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று கணிசமான வசூலையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட துருவிடம் செய்தியாளர் ஒருவர் ‘நீங்கள் வாரிசு நடிகராக இருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு சுலபமாக கிடைத்து விட்டது .ஏற்கனவே நெப்போட்டிசம் என்று பேசுகிறார்கள்.. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன துருவ் ‘நான் வாரிசு நடிகராக இருப்பதால் வாய்ப்புகள் கிடைப்பது உண்மைதான். அதேநேரம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வதற்கும், என்னை விரும்புவதற்கும், சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். அதுவரைக்கும் கடினமாக உழைப்பேன்’ என பதில் சொல்லி இருக்கிறார்.