Vijay TVK: முழுக்க முழுக்க நீங்கதாங்க பொறுப்பு! கரூர் சம்பவம் பற்றி ப்ளூசட்டை மாறன் பதிவு
Vijay TVK:
நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக விஜய் அங்கு வர அவரைக் காண ஏராளமான மக்கள் ஒன்று கூட அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆங்காங்கே சிலர் மயங்கி விழுந்தனர். அந்த சமயத்திலும் விஜய் என்னாச்சு கொஞ்சம் தண்ணி கொடுங்கப்பா என மேலிருந்து தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசினார். இப்படி விஜயை காண அனைவரும் முண்டி அடித்துக் கொண்டு வர அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இன்று 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
பேசு பொருளான சம்பவம்:
,இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அறிந்த உடனே ஆளும் கட்சியின் தலைவர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அடுத்தடுத்து கரூர் பயணம் மேற்கொண்டனர். இன்று மற்ற கட்சி தலைவர்களும் கரூருக்கு விரைந்து சென்று அந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அவர்களது ஆறுதல்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் நடந்த நேற்று இரவு உடனே விஜய் சென்னைக்கு புறப்பட்டது தான் இன்று பெரும் பேசு பொருளாக பார்க்கப்படுகிறது.
அவர் நினைத்திருக்கலாம், மீண்டும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தால் கூட்டம் கூடி விடுமே? அதனால் மறுபடியும் ஏதாவது சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கும் என்பதை உணர்ந்து கூட அவர் அங்கிருந்து புறப்பட்டு இருக்கலாம். ஆனால் இதையும் ஒரு பெரிய சர்ச்சையாக சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த சம்பவம் குறித்து அவருடைய கருத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது இரவு நேரங்களில் இந்த மாதிரி பிரச்சாரம், மாநாடு இவற்றை செய்தால் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் விஜய் தன்னுடைய அனைத்து கூட்டங்களையும் 6 மணிக்கு முன்பாகவே முடித்திருக்கிறார்.
ரத்து செய்த விஜய்:
அதேபோல அவர் சனி ஞாயிறு கிழமைகளை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் மற்ற வார நாள்களில் இது போன்ற பிரச்சாரத்தை செய்யும் போது அதனால் பொதுமக்கள் வியாபாரிகள் இவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் தான் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தார். இந்த ஒரே ஒரு இரவு பிரச்சாரம் மட்டுமே பெரும் துயரில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது. கடந்த முறை ஒரு ஊரில் அவர் பிரச்சாரம் செய்வதற்கு தாமதம் ஆனதால் அந்த நிகழ்ச்சியை அப்படியே ரத்து செய்தார் விஜய்.
அதேபோல இந்த கரூர் பிரச்சாரத்தையும் அவர் ரத்து செய்திருந்தால் இவ்வளவு துயரம் வந்திருக்காது. ஆனால் காலை முதல் இரவு வரை தனக்காக காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றவா என்று நினைத்து கூட கரூருக்கு அவர் அந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். இதற்கு முன்பு வரை அலார்ட்டாகவே இருந்த விஜய் இந்த முறை அதை தவறி விட்டார். ஒவ்வொரு முறையும் அவர் கூட்டம் நடத்தும் போது என்னுடைய வாகனத்தை பின் தொடர வேண்டாம். ஆங்காங்கே ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும் அவருடைய ரசிகர்கள் கேட்கவில்லை.
இதற்கு பொறுப்பு:
அதைத்தொடர்ந்து செய்துதான் வந்தார்கள். உங்கள் தலைவர் சொல்லியே நீங்கள் கேட்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது. இதற்கு நீங்களும் ஒரு பொறுப்பு. தவெக நடத்தும் ஒவ்வொரு கூட்டங்களிலும் கர்ப்பிணி பெண்கள் வர வேண்டாம். கை குழந்தைகளை அழைத்து வர வேண்டாம். இதை டிவி அல்லது youtube நேரலையிலேயே வீட்டிலிருந்தே பாருங்கள் என ஒவ்வொரு முறையும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அதையும் மீறி வருபவர்களை என்ன சொல்வது? கடைசியில் அந்த பச்சிளம் குழந்தைகள் நம்மை விட்டு போனதுதான் மிச்சம் என ப்ளூ சட்டை மாறன் அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
