நயன்தாரா செய்த வேலை!.. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு ஆப்பு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!..

by Ramya |   ( Updated:2025-01-28 06:54:31  )
netflix
X

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருந்து வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ். இருவருமே சினிமாவில் தங்களுக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள். சிறந்த நண்பர்களாக இருந்து வந்த நயன்தாராவும் தனுஷும் சில மனஸ்தாபத்தின் காரணமாக ஒருவரை ஒருவர் பேசாமல் இருந்து வந்திருக்கிறார்கள். அதிலும் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு பெரியளவு பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்திருக்கின்றது.

நடிகை நயன்தாரா கடந்த வருடம் நவம்பர் மாதம் திடீரென்று சமூக வலைதள பக்கத்தில் மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் குறித்து காட்டமாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதாவது நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.


இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து நயன்தாரா மற்றும் தனுஷுக்கு ஆதரவாக அவரவர் ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு சண்டை போட்டு வந்தார்கள். இதற்கிடையில் நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகி படத்தில் இடம்பெறாத அதாவது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. மேலும் இந்த வழக்கை காப்பிரைட்ஸ் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என வாதிட்டார்.

2020 ஆம் ஆண்டு முதலே இந்த காட்சிகள் அனைத்தும் பொது தளத்தில் இருப்பதாகவும், மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததாக அவர் வாதிட்டு இருந்தார். இந்த ஆவணம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷிடம் இருந்து மின்னஞ்சல் மூலமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்துதான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஆரம்ப காலத்தில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து வாதத்தை முன் வைத்திருந்தார். இவரது வாதத்திற்கு பிறகு வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிஎஸ் ராமன் நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே வொண்டர்பார் நிறுவனத்திற்கு சொந்தமானது.

ஆரம்பத்தில் டிரெய்லர் வெளியான போதே அதில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து காட்சிகள் பயன்படுத்தியதற்கு அந்த காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய போது நயன்தாரா தரப்பில் வெளிப்படையாக பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தார். மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து காட்சிகளும் பட நிறுவனத்திற்கு சொந்தமானது.


நயன்தாரா ஒப்பந்தம் செய்யும்போது அவர் உடை அலங்காரத்தில் இருந்து அனைத்துமே வொண்டர்பார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டு இருக்கின்றார். எனவே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றாலும் அது வொண்டர்பார் நிறுவனத்திற்கு தான் சொந்தமானது. அதன் முழுஉரிமை நிறுவனத்திற்கு மட்டுமே சேரும் என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றார். அதாவது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றார். மேலும் வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையை வரும் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார் நீதிபதி.

Next Story