தமிழ்பற்றை பத்தி வாய்கிழிய பேசினீங்க.. ஆனா செயல்ல ஒண்ணுமே இல்லையே மகிழ்..!

by Ramya |   ( Updated:1 Feb 2025 1:30 PM  )
mazhil thirumeni
X

Director Mazhil Thirumeni: தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. முதல் திரைப்படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற மகிழ் திருமேனி அடுத்ததாக மீண்டும் நடிகர் அருண் விஜயை வைத்து தடம் என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் மொத்தமே ஐந்து திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் ஒரு சிறந்த இயக்குனராக அறியப்பட்டார்.

விடாமுயற்சி வாய்ப்பு: இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு விடாமுயற்சி. நடிகர் அஜித்தை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. விடாமுயற்சி திரைப்படத்தின் மூலக்கதை மகிழ்திருமேனி உடையது இல்லை என்றாலும் நடிகர் அஜித் தேர்ந்தெடுத்த ஹாலிவுட் படத்தின் தழுவல் கதையை மகிழ் திருமேனி இயக்கி இருக்கின்றார்.


பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவலாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் இந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் வெளியாகவில்லை.

விடாமுயற்சி ரிலீஸ்: இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் பொங்கல் ரேஸிலிருந்து விலகியது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களில் இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் புரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் தனக்கு இருந்த தமிழ்பற்று குறித்து பெருமையாக பேசியிருந்தார்.

மேலும் தன்னுடைய உண்மையான பெயர் மகிழ் திருமேனி கிடையாது, புனைபெயர் தான் இது. அந்த பெயரும் தமிழ் பற்றுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மகிழ் திருமேனி என வைத்துக் கொண்டதாக பேசியிருந்தார். மேலும் சினிமாவில் நான் இயக்குனராக மாறவில்லை என்றால் நிச்சயம் ஒரு நாவலாசிரியராக மாறி இருப்பேன் என்று கூறியிருந்தார்.


சினிமா விமர்சகர்கள் கேள்வி: மகிழ் திருமேனி தன்னுடைய தமிழ்பற்று குறித்து பல்வேறு இடங்களில் பேசி வரும் நிலையில் அவரின் திரைப்படங்களில் மட்டும் ஏன் தமிழ் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதாவது விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் மும்பை மற்றும் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை வைத்து படத்தை எடுத்ததாக கூறப்படுகின்றது.

தமிழ்பற்று குறித்து வாய்கிழிய பேசிவரும் மகிழ் சினிமாவை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அவர்களை வைத்து வேலை வாங்கி இருக்கலாம். அது அவர்களுக்கு மிக உதவியாக இருந்திருக்கும். ஆனால் பேச்சுக்கு மட்டும் பேசிவிட்டு செயல்பாட்டில் ஒன்றும் செய்யவில்லை என்று மகிழ் திருமேனி மீது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள்.

Next Story