Coolie:புதுச்சேரியில் ‘கூலி’ படத்திற்கு இப்படி ஒரு பிரச்சினையா? இத யாரும் கவனிக்கலையா?
ரஜினி நடிப்பில் நாளை வெளியாக கூடிய திரைப்படம் கூலி. படம் ரிலீசுக்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரை ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என்ற அடிப்படையில் படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த படம் தயாராகி இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரீ புக்கிங்கிலும் கூலி திரைப்படம் வசூல் சாதனை செய்து வருகிறது. பெரும்பாலும் எல்லா திரையரங்குகளிலும் எல்லா ஊர்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ,ஆந்திராவில் காலை 6 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்க இருக்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் கூலி திரைப்படத்தை வெளியிட கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் கடும் வரிவிதிப்பின் கீழ் போராடி வருகின்றன. அதிக பொழுதுபோக்கு வரிகள் காரணமாக கூலி திரைப்படத்தின் வெளியீடு தடை பட்டிருக்கிறது. தமிழ் படங்களுக்கான பொழுதுபோக்கு வரியை தமிழ்நாடு நான்கு சதவீதமாக குறைத்து இருந்தாலும் புதுச்சேரி இரட்டை வரிவிதிப்பு ஜிஎஸ்டி மற்றும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை விதித்திருக்கிறது. அதாவது 100க்கு குறைவான விலையுள்ள டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் 100க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டிற்கும் கூடுதலாக 25 சதவீதம் உள்ளூர் பொழுதுபோக்கு வரை விதிக்கப்படுகிறது. அதாவது டிக்கெட் வருவாயில் கிட்டத்தட்ட பாதி அரசாங்கத்திற்கு செல்கிறது. இந்த அதிக வரி சுமையால் புதுச்சேரி திரையரங்குகள் இயக்க முடியாமல் திணறி வருகிறது .இதனால் புதுச்சேரி சினிமா உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து பொழுதுபோக்கு வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது.
அங்கு 20க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்தாலும் தற்போதைய வரி விதிப்பின் கீழ் பெரிய படங்களை வெளியிட விநியோகஸ்தர்கள் தயங்கி வருகிறார்கள். இருந்தாலும் இந்த வரியை குறைக்க மறுத்து அதிலிருந்து ஆண்டுக்கு 5 கோடி வருவாய் ஈட்டுவதாக கூறியுள்ளது .இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடந்து தோல்வியடைந்த பிறகு திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக நாளை வெளியாக கூடிய கூலி திரைப்படம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 15 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
