விஜயால் முடியாததை ரஜினி செய்து காட்டுவாரா!.. 1000 கோடி வசூலை தொடுமா கூலி?..

Coolie : இப்போதெல்லாம் திரையுலகில் 500 கோடி வசூல் 1000 கோடி வசூல் என சாதாரணமாக எல்லோரும் பேச துவங்கிவிட்டனர். 80களில் சினிமாவின் பட்ஜெட் முதல் வசூல் வரை எல்லாமே லட்சங்களில் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் சம்பளமே 100 கோடியை தாண்டிவிட்டது. ஏனெனில் பட வியாபாரத்தின் எல்லையும் அதிகரித்துவிட்டது.
விஜய்க்கு 200 கோடி சம்பளம், படத்தின் பட்ஜெட் 200 கோடி என 400 கோடி செலவும் கோட் படத்தை எடுத்தார்கள். இப்படம் 450 கோடி வரை வசூல் செய்தது. அதாவது 50 கோடி மட்டுமே லாபம். இந்த லாபம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் பிரியும். கோலிவுட்டில் அதிக வசூலை பெறும் விஜயின் நிலைமையே இதுதான்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் ரஜினி. கடந்த சில வருடங்களில் விஜயை இவரை ஓவர் டேக் செய்தார். தனது இடத்தை விடக்கூடாது என ரஜினியும் லோகேஷ், நெல்சன் போன்ற இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க துவங்கிவிட்டார். நேரடி தமிழில் எடுக்கப்பட்ட எந்த திரைப்படமும் இதுவரை 1000 கோடி வசூலை பெறவில்லை.
அப்படி வசூல் செய்ய வேண்டுமெனில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் அப்படம் ஹிட் அடிக்க வேண்டும். அதாவது எல்லா மொழி ரசிகர்களும் ஏற்றுக்கொள்வது போல ஒரு பேன் இண்டியா படமாக ஒரு தமிழ் படம் உருவானால் மட்டுமே இது சாத்தியம். இதை முதலில் சாத்தியப்படுத்தியது பாகுபலி 2 எனும் ஒரு தெலுங்கு படம்தான்.

அதன்பின் புஷ்பா 2 படம் 1650 கோடி வரை வசூல் செய்தது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படம் 1300 கோடி அடித்தது. வசூல் மன்னன் என சொல்லப்படும் விஜயின் படம் இதுவரை 500 கோடி வசூலை கூட தொடவில்லை. ஆனால், ரஜினியின் ஜெயிலர் படம் 650 கோடி வரை வசூல் செய்தது. கமலின் விக்ரம் படம் 400 கோடி வசூலை பெற்றது. நேரடி தமிழ் படங்களில் அதிக வசூல் இந்த படங்கள்தான். எனவே, எந்த நடிகரின் படம் 1000 கோடி வசூலை முதலில் அடிக்கும் என்கிற போட்டியும், எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் இருக்கிறது.
இந்நிலையில் ரஜினியின் கூலி படம் 1000 கோடி வசூலை பெறும் என்கிற நம்பிக்கை பலருக்கும் வந்திருக்கிறது. ஏனெனில் படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது. மேலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் இப்படம் வெளியாவதால் நல்ல வசூலை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் அமீர்கான் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், லோகேஷும் ரஜினியும் இணைந்திருப்பதாலேயே கூலி படத்தின் வியாபாரம் இவ்வளவு உயரத்தை தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.