Dhruv Vikram: அந்த இயக்குனருடன் கை கோர்க்கும் துருவ்!... இது வேறலெவல் காம்போ...

சினிமாவில் ஒரு பிரபலமான நடிகரின் மகனாக இருந்தால் மட்டுமே வெற்றிகள் கிடைத்துவிடாது. பல பிரபலங்களின் வாரிசுகள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
சிபிராஜ், சாந்தனு என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. சினிமாவில் வாரிசு நடிகராக களமிறங்கியவர்தான் துருவ்.
ரசிகர்களால் சீயான் என அழைக்கப்படும் விக்ரமின் மகனான துருவ் தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை கொடுக்காததால் அதே கதையை ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் மீண்டும் எடுத்தார்கள்.
எனவே ஒரே கதையில் இரண்டு முறை நடித்தார் துருவ். அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய மகான் படத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது..
‘எனது முதல் படம் தெலுங்கு ரீமேக், இரண்டாவது படத்தில் நான் ஹீரோ இல்லை.. அப்படி பார்த்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள பைசன் படத்தையே என் முதல் படமாக கருதுகிறேன். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை போட்டிருக்கிறேன்’ என பைசன் பட ப்ரமோஷன் விழாவில் பீலிங்காக பேசினார் குரு.
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் மற்றும் 30 வருடங்களுக்கு முன்பு இரு சாதி தலைவர்களுக்கு இடையே இருந்த மோதல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு துவக்கம் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது.
சில எதிர்ப்புகள் வந்தாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். நான்கு நாட்களில் இப்படம் 20 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.
இந்த படத்தின் மூலம் துருவ் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். பல இயக்குனர்களும் துருவின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்து கவினை வைத்து டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் துருவ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர் ரகுமானிடம் பேசி வருகிறார்கள். ஜி.வி பிரகாஷை வைத்து ‘அடியே’ என்கிற படத்தை தயாரித்த நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாம்.