டீசலுக்கு ஆப்பு வச்ச காந்தாரா 2!.. ரெட் ஜெயண்ட் வந்தும் நடக்கலயே!.. தீபாவளி ரிலீஸ் போச்சே!....

Diesel: பொதுவாக தீபாவளி போன்ற நாட்களில் ரஜினி, விஜய், கமல், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஆனால் முதல்முறையாக இந்த வருட தீபாவளிக்கு இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
அதேபோல் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள டீசல் படமும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 17ம் தேதி ரிலீசாகவுள்ளது. கடல் வழியாக டீசல் திருட்டு எப்படி நடக்கிறது என்பதை இந்த படத்தில் மிகவும் தெளிவாக காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதேபோல் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள Dude திரைப்படமும் வருகிற 17-ம் தேதி வெளியாகியுள்ளது. எனவே இந்த மூன்று படங்களில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கும் என்பது படங்கள் வெளியான பின்னரே தெரியவரும். மாரி செல்வராஜின் மாமன்னன், வாழை ஆகிய இரண்டு படங்களும் ஹிட் அடித்திருப்பதால் பைசன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை கொடுத்து முக்கிய நடிகராக மாறி இருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் படம் என்பதால் Dude படத்திற்கும் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தங்கள் படத்தை கொடுத்து விட்டால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என கணக்கு போட்ட டீசல் பட தயாரிப்பாளர் அந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை அந்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டார். குறைந்தபட்சம் 250 தியேட்டர்களில் படத்தை வெளியிடுவோம் என ரெட்ஜெயண்ட் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் கடந்த 2ம் தேதி வெளியான காந்தாரா 2 படம் இப்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தீபாவளி நேரத்திலும் குறைந்தபட்சம் 100 தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்த 100 தியேட்டர்கள் போக குறைந்தபட்சம் 75 லிருந்து 110 தியேட்டர்கள் மட்டுமே கிடைக்கும் ரெட் ஜெயண்ட் தரப்பு சொல்ல டீசல் பட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.