TVK Vijay: விஜயின் அரசியலுக்கு இது நல்லதில்ல!.. அட்வைஸ் கொடுத்த இயக்குனர் அமீர்!..

by Murugan |
ameer vijay
X

அமீர் vijay

TVK Vijay: நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனது மன்ற நிர்வாகிகளிடம் அரசியலில் இறங்குவது பற்றி தொடர்ந்து ஆலோசித்து வந்தார். விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வது, அவரின் படம் ஓடும் தியேட்டர்களில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்தது, தலைவா படத்தை வெளியிட முடியாமல் 2 நாட்கள் தடுத்து வைத்தது, மாஸ்டர் பட படப்பிடிப்பில் இருந்த அவரை அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை செய்தது என பல வகைகளில் அவரை அரசியல் கட்சியினர் சீண்டிக்கொண்டிருந்தார்கள்.

இதுதான் விஜயை அரசியலை நோக்கி தள்ளியிருக்கலாம் என கருதப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என பல வருடங்களாக சொல்லி வந்த ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின் வாங்கினார். இப்போது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டையும் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். எனவே இந்த மாநாடு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த மாநாட்டில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். சமூக நீதி என சொல்லிக்கொண்டு ஊழல் செய்து மக்களை ஏமாற்றி வரும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவேன் எனவும் பேசினார். அதோடு, திமுகதான் என்னுடைய அரசியல் எதிரி என அழுத்தமாக பேசினார்.


விஜயின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, நேற்று சென்னையில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிலும் திமுகவை விமர்சித்து பேசினார் விஜய். கூட்டணிக் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. சுயநாலமாக 200 தொகுதி வெற்றி பெறுவோம் என கூட்டணி கணக்கு போட்டு சொல்லி வரும் ஆட்சிக்கு 2026 தக்க பதிலடி கிடைக்கும் என பேசினார்.

விஜய்க்கு பின் பேசிய விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விஜயை ஆதரித்து பேசியதோடு, திமுகவுக்கு எதிராகவும் பேசினார். மன்னராட்சி முடிவுக்கு வரவேண்டும். விஜய் ஊழல் பற்றி பேச வேண்டும். சினிமா வியாபாரத்தை ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது என்றெல்லாம் பேசி அதிர வைத்தார். அதிர்ச்சி என்னவெனில் திமுகவின் கூட்டணியில் விசிக இருக்கிறது.

இது திருமாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘அம்பேத்கர் விழாவில் பேசியது அவரின் சொந்த கருத்து. கட்சிக்கு தொடர்பு இல்லை’ என கூறிவிட்டார். அதோடு, ஆதர் அர்ஜூனா மீது கட்சி நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிப்போம் என சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நல்லது தராது.. ஆதவ் அர்ஜூனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல’ ஒரு பதிவும், ‘பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம்; பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம்; ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதலமைச்சராக முடியாது’ எனவும் பதிவிட்டிருக்கிறார்.

Next Story