என்னோட லுக் வச்சு ஜட்ஜ் பண்ணுவீங்களா?.. ஹிந்தி நிகழ்ச்சியில் தரமான பதிலடி கொடுத்த அட்லி!..

by Ramya |
atlee
X

atlee

இயக்குனர் அட்லி: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்த அட்லி தொடர்ந்து நடிகர் விஜய் அவர்களை வைத்து அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தார்.

பாலிவுட் என்ட்ரி:

தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹேட்ரிக் வெற்றியை கொடுத்து தளபதியின் ஆபத்தான இயக்குனராக மாறினார் அட்லி. தமிழில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு பாலிவுட்டில் படம் எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை தோன்றியது. இதனால் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். அட்லி தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் படங்களை எடுப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார்.


தற்போது சல்மான்கான் அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

தெறி ஹிந்தி ரீமேக்:

தெறி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அந்த படத்தை தயாரித்து இருக்கின்றார் இயக்குனர் அட்லீ. தற்போது இயக்குனராக இருந்து அடுத்ததாக தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சிறிது நாட்களை இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அட்லி. அந்த நிகழ்ச்சியில் அட்லியுடன் இணைந்து வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். கபில் சர்மா தொகுத்து வழங்கக்கூடிய இந்த டிவி ஷோவில் அட்லீயிடம் கபில் சர்மா ஏதாவது ஒரு நடிகர் அல்லது தயாரிப்பாளரை நீங்கள் சந்திக்கும் போது அட்லீயா? யாரு அது என்று கேட்டிருக்கிறார்களா என கேட்டார்.

அதாவது தொகுப்பாளர் அவரின் நிறத்தை வைத்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். இதனை புரிந்து கொண்ட அட்லி அதற்கு சரியான பதில் கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நீங்கள் என் நிறத்தை பற்றி தான் கூறுகிறீர்கள் என்பது எனக்கு நன்றாக புரிகின்றது. என் முதல் பட தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.


அவர்தான் என் கதையை பார்த்தார். என் கதை எப்படி இருக்கு, அதை நான் எப்படி எழுதி இருக்கிறேன் என்று பார்த்தார். நான் எப்படி இருக்கின்றேன் என்பதை அவர் பார்க்கவில்லை. ஒருவரின் நிறத்தை வைத்து அவர் எப்படி என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. அவர்களின் எண்ணத்தையும், திறமையையும், மனதையும் பார்த்துதான் முடிவுக்கு வரவேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தார் அட்லி. இந்த வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story