வணங்கான் வரட்டும்!. அருண் விஜய் யாருன்னு தெரியும்!.. ஹைப் ஏத்தும் பாலா!....
Vanangaan: ஒரு திறமையான நடிகருக்கு வாய்ப்பு சரியாக அமையாத வரை அவர் சிறப்பாக நடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது. பதினாறு வயதினிலே படம் வரும் வரை கமல் வெறும் சாதாரண நடிகராகத்தான் பார்க்கப்பட்டார். சேது படம் வரை நடிகர் விக்ரமை ரசிகர்களுக்கு தெரியாது. இத்தனைக்கும், அந்த படம் வருதற்கு முன் சில நேரடி தமிழ் படங்களிலும், பல மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
சேது படம்தான் விக்ரம் என்கிற நடிகரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அப்படி, ஒரு நடிகரிடம் இருக்கும் திறமையை கொண்டு வர பாலா போன்ற இயக்குனர்கள் தேவை. தனுஷுக்குள் இருக்கும் சிறந்த நடிகரை அவரின் அண்ணன் செல்வராகவனும், வெற்றிமாறனுமே திரையில் அதிகம் காட்டினார்கள்.
யாரும் பார்க்காத ரஜினியை மகேந்திரன் பார்த்தார். ரஜினிக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகரை கண்டுபிடித்து அதை முள்ளும் மலரும், ஜானி போன்ற படங்களில் வெளியே கொண்டு வந்தார். நாசர் பல படங்களில் நடித்திருந்தாலும் தேவர் மகன் படம்தான் அவரை பிரபலமாக்கியது. அதற்கு காரணம் கமல்ஹாசன்.
அதுபோலத்தான் இயக்குனர் பாலாவும். இவர் படங்களில் நடிக்கும் ஹீரோக்களை அப்படியே மொத்தமாக மாற்றிவிடுவார். நந்தா படத்திற்கு முன் சூர்யா சாக்லேட் பாயாக சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய 2 படங்களும் அவரை ஒரு முழு நடிகராக மாற்றியது. பிதாமகன் படத்தில் பாலா உருவாக்கிய வெட்டியான் வேடத்தில் நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
நான் கடவுளுக்கு முன்பும், பின்பும் ஆர்யா ஒரு சாக்லேட் பாய்தான். அந்த படத்தில் அவரிடம் பாலா வேலை வாங்கிய விதம் வேற லெவலில் இருக்கும். ஆர்யாவை அப்படி யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு வாய் பேசாத, காது கேட்காத கதாபாத்திரம் அவருக்கு. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் கண்டிப்பாக சிறந்த நடிப்பை கொடுத்திருப்பார். இந்நிலையில், ஊடகமொன்றில் பேசிய பாலா ‘அருண் விஜய் பத்தி சொல்லணும்னா அவர் ஒரே ஜம்பில் நாலு படி தாண்டியிருக்கிறார். இனிமேல் அவர் மேலேதான் போவார். கீழே இறங்க வாய்ப்பிலை. அருண் புதிதாக என்னிடம் வந்திருக்கிறார். அவருக்காக நான் மெனக்கெடணும். அது என் கடமை. அதை செய்யலன்னா அப்புறம் எதுக்கு கேப்டன் ஆப் தி ஷிப்னு சொல்லிக்கிட்டு காலரை தூக்கிக்கிட்டு நான் திரியணும்’ என பேசியிருக்கிறார்.
வணங்கான் திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மமிதா பைஜூ, ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி என பலரும் நடித்திருக்கிறார்கள்.