Bison: உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?!.. விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் பதிலடி!...

பல வருடங்களாகவே சினிமா பொழுதுபோக்கு அம்சமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில இயக்குனர்கள் கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் சிரியஸ் சினிமாவை எடுக்க தொடங்கினார்கள். பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் தங்களின் படங்களில் கருத்து சொன்னாலும் சினிமாவுக்கான இலக்கணத்தை மீறவில்லை. அதேநேரம், சீரியஸ் சினிமாக்களை பெரும்பாலான ரசிகர்கள் விரும்புவதில்லை.
அந்த வரிசையில் வந்திருப்பவர்தான் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமிடம் சினிமா கற்றுக் கொண்டவர் இவர். தென் மாவட்ட சேர்ந்தவர் என்பதால் தனது சொந்த ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்களோ அதை எல்லாம் தனது திரைப்படங்களில் பேசி வருகிறார். இதையடுத்து இவரை கடுமையாக விமர்சனம் செய்பவர்களும் உண்டு.
‘எப்போ பார்த்தாலும் நசுக்கிட்டாங்க பிதுக்கிட்டாங்க என்று படமெடுத்து வருகிறார்’ என இவரை பலரும் நக்கலடிப்பது உண்டு. ஆனாலும் மாரி செல்வராஜ் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு பிரச்சனையை எடுத்து பேசி வருகிறார். இவர் இயக்கியதில் மாமன்னன் வாழை இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்றது.
தற்போது விக்ரம் துருவை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தென் மாவட்டத்தில் வசிக்கும் கபடி வீரர் மனத்தி கணேசனின் சொந்த வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்பபடத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். தீபாவளியை முன்னிட்டு இப்படம் நாளை வெளியாக வருகிறது.
இந்நிலையில் பைசனை புரோமோஷன் செய்யும் விதமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார் மாரி செல்வராஜ். அப்போது தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி பேசிய அவர் ‘தனி மனிதர்களை புகழ் பாடுவது போன்ற கதைகளை மட்டுமே இங்கே பலரும் திரைப்படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அந்த இயக்குனர்களை யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. தென் மாவட்டங்களில் நடக்கும் உண்மை சம்பவங்களை நான் படமாக எடுத்தால் என் மீது ஏன் இவ்வளவு விமர்சனம்?.
உண்மை சம்பவங்கள் தொடர்பான திரைப்படங்களை ‘போதும்’ என சொல்வதற்கு இவர்கள் யார்? அப்படி சொல்லும் உரிமைகளை இவர்களுக்கு யார் கொடுத்தது?.. என கேள்வி எழுப்பியிருக்கிறார் மாரி செல்வராஜ். மேலும் ‘கிராமங்கள் அழகாக இருப்பதாக வெளியே இருப்பவர்களுக்கு தோன்றும். ஆனால் அங்கே வசித்து பார்த்தால்தான் அதில் உள்ள பாம்புகளும், புழுக்களும் தெரியும். சோத்துக்கே வழியில்லாதவன் கூட சொந்த ஊருக்கு போனால் சாதி பார்க்கிறான். அதுதான் அவனது வலிமை என நினைக்கிறேன்’ என பொங்கி இருக்கிறார்.
மேலும் படத்திற்கு பைசன் என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பைசன் படம் தமிழ்நாட்டை கடந்தும் செல்ல வேண்டும் என்பதற்காக பொதுவான தலைப்பை வைக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது. என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் களமாடன் என்றுதான் தலைப்பு இருக்கிறது என பேசி இருக்கிறார்.