ரஜினியோட மத்த படங்களாம் சூப்பரா?.. கபாலி மட்டும்தான் பிடிக்கலயா?!.. பொங்கிய ரஞ்சித்!....
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித். அடுத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ரஞ்சித் எந்த மாதிரியான இயக்குனர் என்பதை காட்டியது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை இவர் தனது படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரு படங்களையும் இயக்கினார். சியான் விக்ரமை வைத்து தங்கலான் என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தும், சியான் விக்ரம் கடுமையான உழைப்பை போட்டிருந்தும் இந்த படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களுக்கு புரியாமல் போய்விட்டது.
இந்நிலையில் பைசன் பட வெற்றி விழாவில் பேசிய ரஞ்சித் ‘உனக்கெல்லாம் ரஜினி வாய்ப்பு கொடுத்தார் பாரு.. அவர எப்படி இந்த மாதிரி வசனத்தை எல்லாம் நீ பேச வைக்கலாம்?’ என மோசமாக விமர்சனம் செய்தார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கபாலி படத்தின் வசூல் என்ன என்பது அப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணு சாருக்கு தெரியும். ரிலீசுக்கு முன்பே அப்புடம் 100 கோடி வசூல் செய்தது.

ஒரு படம் வணிகரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே அது உண்மையான வெற்றி என்றால் இங்கே மோசமான விமர்சனங்களை பெற்ற பல திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அதை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?. ஆனால் கபாலியை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். அந்த படத்தின் திரையாக்கத்தில் தவறு இருந்தால் அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எப்படி இந்த நடிகரை இப்படி நடிக்க வைக்கலாம்? இந்த கதையை நீ எப்படி எடுக்கலாம்?’ என கேட்டார்கள்.
ரஜினி சார் நடித்த எல்லா படங்களையும் நீங்கள் கொண்டாடினீர்களா?.. உங்களுக்கு கபாலி மட்டும்தான் பிடிக்கவில்லையா?.. ரஜினி சாருக்கு என்னை பிடித்திருந்ததால்தான் என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க முன்வந்தார். கபாலி படத்திற்கு அவ்வளவு விமர்சனங்கள் வந்த பின்பும் ரஜினி சாரை வைத்து ஒரு கமர்சியல் மசாலா படத்தை எடுத்து என் வசதியை என்னால் பெருக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால், நான் அதை செய்யாமல் நிலமில்லாத மக்களுக்கு நிலத்தை பெற்றுக்கொடுக்கும் கதையை வைத்து காலா படம் எடுத்தேன்’ என பொங்கிவிட்டார்.
