இப்படி படம் எடுக்குறதுக்கு வேற தொழில் இருக்கு! மேடையில் பொங்கிய பேரரசு
தமிழ் சினிமாவில் ஊர் பெயரை மையப்படுத்தி படங்களை எடுத்து அதில் வெற்றிப்பெற்ற இயக்குனர் பேரரசு. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி இயக்குனராக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது சமூக சிந்தனை, சமூக சேவை முதலான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பேரரசு சமீபத்தில் வெளியான டியூட் படத்தை மறைமுகமாக பேசியிருக்கிறார்.
பரத் நடிப்பில் வள்ளுவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் மீசை ராஜேந்திரன் டியூட் படத்தை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார். கலாச்சார சீரழிவு அந்தப் படத்தில் நிறையவே இருக்கிறது. அது நமது சினிமாவை பெருமளவில் பாதிக்கும் என கூறியிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து பேசிய பேரரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் படங்களாக எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஆபாச படமாக எடுத்துவிட்டு போய்விடலாம்.அப்படி படம் எடுக்கும் போது நம்மாளு ஏ சான்றிதழ் கொடுப்பான். இளைஞர்கள் தடுக்கப்படுவார்கள். ஆபாசத்தை , காமத்தை விரும்புபவர்கள் போய் படத்தை பார்ப்பார்கள். அதனால் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் படங்களாக எடுக்காதீர்கள்.
நல்ல படம்னு சொல்லி உள்ளே வந்து உட்காரும் போது அதில் கலாச்சார சீரழிவை காட்டினால் அது நமது கலைக்கே நாம் செய்கிற துரோகம். அப்படி எடுத்து பிழைக்க வேண்டுமென்றால் அதுக்கு வேற தொழில் இருக்கிறது. காமெடியாக படம் எடுக்கணுமா? கடைசியில் கருத்தை சொல்லுங்கள். ஆக்ஷன் படமாக எடுக்கணுமா? அதிலும் கடைசியாக கருத்தை சொல்லுங்க.
ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் வலியுறுத்தும் படங்களாக எடுங்கள். அதுதான் நமக்கும் நம் தமிழ் சினிமாவிற்கும் நல்லது என பேரரசு அந்த விழாவில் பேசியுள்ளார். அவர் சொல்வதை போல் இப்படி கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக படங்களை எடுக்கும் போது இப்போதுள்ள தலைமுறையினர் அதை பார்த்துதான் வளருவார்கள். அது நம் சமூகத்திற்கு செட்டாகாது.
