புதுப்பேட்டை 2.. ஆயிரத்தில் ஒருவன் 2.. அடுத்தடுத்து அப்டேட் கொடுத்த செல்வராகவன்..
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ஆம் வருடம் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்கள், அவர்களின் வாழ்க்கை, அங்கு உருவாகும் கேங்ஸ்டர்கள். பின்னணியில் உள்ள அரசியல் ஆகியவற்றை இந்த படத்தில் தெளிவாக பேசி இருந்தார் செல்வராகவன்.
இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார் தனுஷ். சோனியா அகர்வால் சினேகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதே நேரம் இப்படம் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை.
அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்து 2010ம் வருடம் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், போர் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி இருந்தார் செல்வராகவன்.
ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேக்கிங் வகையில் இந்த படம் பாராட்டைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இதற்காக பல வருடங்கள் அழுததாக செல்வராகவன் ஏற்கனவே சொல்லியிருந்தார்.ஆனால் புதுப்பேட்டை 2 எப்போது வரும்? ஆயிரத்தில் ஒருவன் 2-வை எப்போது எடுப்பீர்கள்? என ரசிகர்கள் தொடர்ந்து செல்வராகவனிடம் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய செல்வ ராகவன்’ ‘ புதுப்பேட்டை 2 படத்தின் கதையை 50 சதவீதம் எழுதி முடித்துவிட்டேன். ஒரு பக்கம் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் கதையும் எழுதி வருகிறேன். கதை திருப்தியாக அமைந்தால் மட்டுமே அதை படமாக எடுப்பேன் .ஒருபக்கம் கார்த்தி, தனுஷ் இருவரும் அடுத்த மூன்று வருடங்களுக்கு பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் படமெடுக்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்.
