இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஃபிளாப்!.. அடுத்து வேள்பாரிக்கு ஆளை தேடும் ஷங்கர்!.. முடின்ச்!..
Velpari movie: அதிக பட்ஜெட்டில் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை கதறவிடுபவர் ஷங்கர். தயாரிப்பு நிறுவனம் கார்ப்பரேட் என்றால் ஓரளவுக்கு சமாளிப்பார்கள். ஆனால், தனி நபர் என்றால் தலையில் துண்டுதான். எனவேதான், ஐ படத்திற்கு பின் ஷங்கர் கார்ப்பரேட் தயாரிப்பாளர்கள் பக்கம் போய்விட்டார்.
கேம் சேஞ்சர்: 10 கோடியில் லவ் டுடே எடுத்து 80 கோடி சம்பாதித்தார்கள். 20 கோடியில் மஞ்சுமெல் பாய்ஸ் எடுத்து 200 கோடி அள்ளினார்கள். இதுதான் வியாபாரம். இதுதான் எல்லோருக்கும் லாபம். ஆனால், ஷங்கரோ கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடலையே 15 கோடி செலவில் எடுத்தார். அந்த படத்தில் வரும் 5 பாடல் காட்சிகளுக்கு மட்டும் 80 கோடி வரை செலவு செய்தார். இதில், 15 கோடி கொட்டி எடுக்கப்பட்ட லைரனா பாடல் படத்தில் வரவே இல்லை.
கேம் சேஞ்சர் வசூல்: தன்னுடைய படம் இப்படித்தான் இருக்கும் என காட்டுவதற்காகவே ஷங்கர் செய்யும் செலவு அது. ரசிகர்களுக்கு அது விஸ்வல் ட்ரீட் என்றாலும் புஷ்பா 2-வை போல வசூலை அள்ளிவிட்டால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் தயாரிப்பாளரின் கதி அதோ கதிதான். கேம் சேஞ்சர் படத்தை 450 கோடி செலவில் எடுத்த தில்ராஜுவுக்கு 120 கோடிதான் வந்திருக்கிறது. இதில், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் பங்கு போக அவருக்கு பெரிதாக ஒன்றுமில்லை. எப்படி பார்த்தாலும் இந்த படம் அவருக்கு 300 கோடிக்கும் மேல் நஷ்டத்தையே கொடுத்திருக்கும்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்து வேள்பாரி கதைக்கு தயாரிப்பாளரை தேட துவங்கிவிட்டார் ஷங்கர். அதற்கு முன் லைக்காவுக்கு இந்தியன் 3 படத்தை அவர் முடித்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே இந்தியன் 2 பிளாப் ஆன நிலையில் இந்தியன் 3 என்னவாகும் என தெரியவில்லை.
வேள்பாரி: வேள்பாரி படத்தை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். எப்படியும் ஆயிரம் கோடிக்கும் மேல் பட்ஜெட் ஆகும். இந்தியன் 2, கேம் சேஞ்சர் என 2 படங்கள் தோல்வி என்பதால் இந்த படத்தை தயாரிக்க எந்த கார்ப்பரேட் நிறுவனம் முன்வரும் என தெரியவில்லை. கதைக்குதான் பிரம்மாண்டம் தேவையே தவிர பிரம்மாண்டத்திற்கு கதை தேவையில்லை என்பதை ஷங்கர் உணரவேண்டும்.
ஒரு படத்தையே வருடக்கணக்கில் எடுப்பார் ஷங்கர். கேம் சேஞ்சர் படத்திற்கு 2 வருடங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்தார் ராம் சரணம். எல்லாம் வீணாப்போய்விட்டது. வேள்பாரிக்கு எப்படியும் நடிகர்களிடம் 4 வருடங்கள் கால்ஷீட் கேட்பார். 2 தோல்விப்படங்களை ஷங்கர் கொடுத்திருக்கும் நிலையில் யார் அவருக்கு அவ்வளவு நாட்கள் கால்ஷீட் கொடுப்பார்கள் என தெரியவில்லை.
இப்போதுள்ள நிலையில் வேள்பாரியில் நடிக்க பெரிய நடிகர்கள் யாரும் முன் வரமாட்டார்கள் என்பதே நிதர்சனம்!...