ராயல்டி கேட்கும் இளையராஜா!.. ரூட்டை வேறு பக்கம் திருப்பிய இயக்குனர்கள்!...

ilayaraja
தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 70களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுவரை வெஸ்டர்ன் இசைகளை கேட்டு வந்த ரசிகர்களுக்கு கிராமத்திய இசையை கொடுத்து விருந்து வைத்தார் ராஜா.
80களில் வெளியான 90 சதவீத படங்களுக்கு ராஜாதான் இசை. அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த கமல், ரஜினி, மோகன் என பலருக்கும் ராஜாதான் இசையமைத்தார். ராஜா வந்த பின்னரே தமிழகத்தில் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனது. 90களில் ரஹ்மான், தேவா போன்ற புது இசையமைப்பாளர்கள் வந்தபின் ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.
ஆனாலும், இப்போதும் இளையராஜா தொடர்ந்து இசையமைத்து கொண்டுதான் இருக்கிறார். அந்த பாடல்களும் ஹிட் அடித்து வருகிறது. ஒருபக்கம், அவரின் ஹிட் பாடல்களை இப்போதும் சில இயக்குனர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் இளையராஜா ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.
அந்த பாடல்களின் உரிமையை பட தயாரிப்பாளர் ஆடியோ நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த நிறுவனத்திடம் நாங்கள் அனுமதி வாங்கிவிட்டோம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், அந்த பாடலை உருவாக்கியவன் என்கிற முறையில் என்னிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்பது ராஜாவின் வாதமாக இருக்கிறது.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், கூலி பட டீசரில் பயன்படுத்தப்பட்ட ‘வா வா பக்கம் வா’, குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட 3 பாடல்கள் என எல்லாவற்றுக்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது தொடர்கதையாகிவிட்டது.
எனவே, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தவே இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். படத்தில் தேவைப்பட்டால் தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், சிற்பி,எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு பலரும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட டூரிஸ்ட் பேமிலி படத்தில் தனது மம்பட்டியான் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.