பல ஆயிரம் கோடி பட்ஜெட்!.. பெரிய இயக்குனர்களை வளைத்து போட்ட 4 நடிகர்கள்!..
பல நூறு கோடி பட்ஜெட்டுகளில் படமெடுப்பது என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. 80களில் சில லட்சங்களில் படம் எடுத்தார்கள். 90களில் அது கொஞ்சம் அதிகரித்தது. ஆனால் கடந்த 10 வருடங்களில் சினிமாவில் முதலீடு என்பது அதிகரித்துவிட்டது. அதற்கு காரணம் சினிமாவின் வியாபாரமும் அதிகரித்துவிட்டது.
இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஃபேன் இந்தியா (Pan India) படங்களாகவே வெளியாகிறது. இதற்கு அடித்தளமிட்டவர் ராஜமௌலி. அவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கில் உருவானாலும் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. அதிலும் பாகுபலி 2 படம் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களும் தங்களின் படங்கள் அதிக பட்ஜெட்டுகளில் உருவாகும் பேன் இந்தியா படங்களாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதை கவுரமாக கருதினார்கள். அதன் விளைவு கேஜிஎப், புஷ்பா, கேஜிஎப் 2, புஷ்பா 2, RRR போன்ற பல படங்கள் வெளிவந்து வசூலை அள்ளியது. குறிப்பாக புஷ்பா 2 திரைப்படம் உலகமெங்கும் 1800 கோடி வசூல் செய்தது.
ஒருபக்கம் கன்னட நடிகர் மற்றும் இயக்குனர் ரிசப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் 16 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 400 கோடி வசூல் செய்தது. அதன்பின் அதிக பட்ஜெட்டில் அவர் இயக்கி நடித்து வெளியான கந்தாரா 2 படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி வசூலை நெருங்கி விட்டது. இந்நிலையில் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களுடன் இணைந்து அதிக பட்ஜெட்டுகளில் உருவாகி வரும் புதிய Pan India படங்களை பற்றி பார்ப்போம்.

பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பின் பேன் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் அதன்பின் சலார், கல்கி, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற அதிக பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். தற்போது அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கி ஹிட் கொடுத்த சந்தீப் ரெட்டி வாங்காவுடன் கைகோர்த்திருக்கிறார்.
அடுத்து புஷ்பா படம் மூலம் பேன் இந்தியா நடிகராக மாறிய அல்லு அர்ஜுன் புஷ்பா 2 சூப்பர் ஹிட்டுக்கு பின் இயக்குனர் அட்லியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் கதை அமைப்பில் ஹாலிவுட் கலைஞர்களும் பணியாற்றி வருவதால் படம் உலக தரத்தில் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த மகேஷ்பாபு பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற படங்களை இயக்கிய ராஜமௌலியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
RRR, தேவரா படங்களுக்கு பின் ஜூனியர் என்.டி.ஆரும் பேன் இந்தியா நடிகராக மாறிவிட்டார். அவர் KGF, KGF2, சலார் ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் நீலுடன் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த 4 திரைப்படங்களும் பல ஆயிரம் கோடி பட்ஜெட்டுகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
