கவுண்டமணியை கரடி மூஞ்சி என திட்டிய நடிகர்! ஸ்கிரிப்டில் இல்லாததை சொல்லி மாட்டிக்கிட்ட சம்பவம்
தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நடிகர் கவுண்டமணி. அடுத்தடுத்து கவுண்டர் கொடுத்து எதிராளிகளை திணறவைப்பார் கவுண்டமணி. தன் எதிரே எந்த பெரிய நடிகர் இருந்தாலும் சரி. எதற்கும் பயப்படாமல் தன் வாய்க்கு என்ன வருகிறதோ அதை காமெடியாக கவுண்டரோடு சேர்த்து அடிப்பார். இதுவே நாளடைவில் மக்கள் ரசிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் கவுண்டமணிக்கும் எஸ்.எஸ். சந்திரனுக்கும் இடையே இந்த கவுண்டராலேயே பெரிய பிரச்சினை வந்திருப்பதாக சினிமா எழுத்தாளர் ராஜ கோபால் கூறினார்.
பெரிய மருது படத்தில் கவுண்டமணியும் எஸ்.எஸ். சந்திரனும் நடித்திருப்பார்கள்.கவுண்டமணி மருமகனாகவும் எஸ்.எஸ்.சந்திரன் மாமனராகவும் நடித்திருப்பார். எஸ்.எஸ். சந்திரனும் கவுண்டமணிக்கு இணையாக கவுண்டர் கொடுத்து வசனம் பேசக் கூடியவர். பெரிய மருது படத்தின் படப்பிடிப்பிற்குள் வரும் போதே இருவரும் காமெடியாக ஒருவரைக் கொருவர் தாக்கி பேசிக் கொண்டேதான் வருவார்களாம்.
ஆனால் ஒரு சமயம் எஸ்.எஸ். சந்திரன் கொடுத்த கவுண்டரால் கடுப்பாகி இருக்கிறார் கவுண்டமணி. எஸ்.எஸ். சந்திரன் சட்டையில்லாமல் வெளியே அம்மா தாயே மகாலட்சுமி சோறு இருந்தா போடும்மா என்று கூறுவாராம். அதற்கு கவுண்டமணி பேர் சொல்லியெல்லாம் பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க என கூறுவாராம். இது ஸ்கிரிப்டில் ராஜகோபால் எழுதியிருந்தது.
கவுண்டமணி சொன்னதுக்கு கவுண்டர் எதும் கொடுக்காமல் ‘ஐயோ மாப்பிள்ளை.. நான் தான் உங்க மாமனார்’ என்று மட்டும் எஸ்.எஸ்,சந்திரனுக்கு வசனத்தை எழுதியிருந்தாராம் ராஜகோபால். ஆனால் ஸ்பாட்டில் கவுண்டமணி சொன்னதுக்கு பதிலடியாக ‘யாரு கரடி மாதிரி உட்கார்ந்திருக்கிறது’ என எஸ்.எஸ். சந்திரன் ஸ்கிரிப்டில் இல்லாததை கூறி விட்டாராம்.
எஸ்.எஸ்.சந்திரன் இப்படி சொன்னதும் லொக்கேஷனில் உள்ளவர்கள் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்களாம். உடனே கவுண்டமணி கட் கட் என சொல்லிவிட்டாராம். உடனே அருகில் இருந்த ராஜகோபாலை அழைத்து ‘இங்க வா.. பேப்பரில் இந்த வசனம் இருக்கிறதா’ என கேட்க ராஜகோபால் இல்லை என சொல்லியிருக்கிறார். உடனே கவுண்டமணி ‘ நீ இல்லைனு சொல்ற.. அவன் பேசுறான் .. நீ பேசாம பாத்துக்கிட்டு இருக்க ’ என கேட்டாராம்.
எல்லாரும் சிரிக்கிறாங்க.. பஞ்ச் நல்லா இருக்கு என சொன்னாலும் எல்லாரும் சிரிக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக நான் நடிக்க முடியாது கோபால் என கவுண்டமணி கூறியிருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் கதைப்படி எஸ்.எஸ். சந்திரன் மாறுவேடத்தில் வருவதால் எனக்கு அடையாளம் தெரியாது. அதனால் பிச்சைக்காரனு சொல்றது லாஜிக்கா கரெக்ட். ஆனால் நான் மாப்பிள்ளைனு அவருக்கு தெரியும்ல? எப்படி கரடி மாதிரினு சொல்லலாம் என சண்டை போட்டு நடிக்க மாட்டேனு சொல்ல அதன் பிறகு எப்படியோ சமரசம் செய்து நடிக்க வைத்தார்களாம். இருந்தாலும் இந்த சீன் இன்னும் அந்தப் படத்தில் இருக்கிறது.