‘குட் பேட் அக்லி’ பாடல் விவகாரம்.. இளையராஜாவுடன் ஏற்கனவே இப்படியொரு பிரச்சினை இருக்கா?

தமிழ் சினிமாவில் இசை உலகில் பெரும் ஜாம்பவனாக அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா.பல தசாப்தங்களாக தனது இசையால் பல சாதனைகளை அடைந்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். இளையராஜாவின் அனுமதியின்றி அவருடைய பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதாக அதை பற்றி பெரிய விவாதமே நடந்தது. இந்த விவகாரத்தில் இளையராஜா 5 கோடி இழப்பீடு கேட்டு சட்ட ரீதியாக அணுகியிருந்தார்.
ஆனால் குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சட்ட பூர்வமாக உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றதாக கூறினார்கள். எனினும் தன் பாடலை தொடர்ந்து அந்தப் படத்தில் பயன்படுத்தி வருவதாக இளையராஜா தரப்பில் நீதிமன்றத்தை நாடியது. அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான படம்தான் குட் பேட் அக்லி.
இந்தப் படத்தில் திரிஷா, பிரசன்னா, பிரியா வாரியர் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இளையராஜாவின் 4 பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த பாடல்களை தன் அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா தரப்பு புகார் அளித்திருந்தனர்.
இதனால் தனக்கு 5 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் கோரியிருந்தார் இளையராஜா. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை நீக்க கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
தற்போது ஓடிடியில் இந்தப் படத்தில் இருந்து பாடல்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கூறுகையில் ‘சோனி மியூஸிக்கிலிருந்து நாங்கள் பாடல்களை வாங்கினோம். ஒவ்வொரு பாடலுக்கும் சுமார் 15லிருந்து20 லட்சம் வரை செலுத்தினோம்.ஏற்கனவே சோனி மியூஸிக்கிற்கும் இளையராஜாவுக்கும் இடையே தகராறு உள்ளது.’
‘வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது என்ன தீர்ப்பு என தெரியவரும். எங்களிடம் அனைத்து சட்ட ஆவணங்களும் உள்ளன. மேலும் உரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது நாங்கள் மேலும் கருத்து தெரிவிக்க கூடாது’ என தெரிவித்திருக்கிறார்கள்.