அஜித்தையும் விட்டு வைக்காத இளையராஜா… இதுக்கு ஒரு முடிவே இல்லையா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தொடர்ச்சியாக படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனக்கு கிடைக்கக்கூடிய நேரங்களில் தன்னுடைய பேஷனுக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். தொடர்ந்து பைக் ரைட் மற்றும் கார் ரேசிங்கில் அஜித் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் அஜித்திற்கு இரண்டு படங்கள் வெளியானது. ஒன்று விடாமுயற்சி மற்றொன்று குட் பேட் அக்லி.
விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் படுதோல்வி அடைந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது. விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும் வசூலில் வாரி குவித்தது. தற்போதைய காலங்களில் பழைய பாடல்களை சண்டை காட்சிகளுக்கு பயன்படுத்துவது ட்ரெண்டாகி உள்ளது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். மக்களிடம் இந்த ட்ரெண்ட் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மற்ற இயக்குனர்களும் பாலோ செய்ய தொடங்கிவிட்டனர்.
அப்படி குட் பேட் அக்லி திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பொதுவாக இளையராஜா தன்னிடம் அனுமதி பெறாமல் தன்னுடைய பாடல்களை யார் பயன்படுத்தினாலும் காப்பிரைட்ஸ் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடுவார். அதே போல தான் தற்போது அஜித் படத்திற்கும் நடந்துள்ளது. படம் வெளியாகி சில மாதங்கள் ஆனாலும் இளையராஜா இப்படி செய்திருப்பது ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் இதைப் பற்றி கூறுகையில்,” இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இதற்கு நீதிமன்றம் தான் உடனடி தீர்வு கொடுக்கணும். ஏனென்றால் இளையராஜாவும் காப்பிரைட்ஸ் வைத்துள்ளார் அதேபோல அவர் பாடலை விற்ற அந்த நிறுவனம் காப்பிரைட்ஸ் வைத்திருக்கிறது. இரண்டு பேருமே தற்போது காப்பிரைட்ஸ் கேட்கிறார்கள்”.
”அது தான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. நீதிமன்றம் பாடல்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிட்டால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும். அப்படி சொல்லிவிட்டால் இளையராஜா ஏற்கனவே பெறப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் இதற்கு தீர்வு என்பது கிடைக்காமல் இருக்கிறது. நீதிமன்றங்களுக்கு சென்றால் வருடக் கணக்கில் ஆகும். அதனால் இந்த விஷயத்துக்கும் அந்த மாதிரி நடக்குமா? என்பது தெரியாது. அதுவரைக்கும் இந்த குழப்பம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்”. என்று கூறியுள்ளார்.
