சிவகார்த்திகேயனுக்கு ஒரு துப்பாக்கி!. ஹைப் ஏத்தும் மதராஸி படத்தின் ஹைலைட்ஸ்!...

Madharasi: அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களில் முக்கிய நடிகராக மாறியிருப்பவர்தான் சிவகார்த்திகேயன். கடந்த பல வருடங்களாகவே காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து கதாநாயகிகளை ஈவ் டீசிங் செய்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அமரன் வசூல்: இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை சுடும்போது குண்டடிபட்டு மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்கெட் மதிப்பும் அதிகரித்திருக்கிறது. 40 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் இப்போது 70 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
பராசக்தி பட கதை: அமரன் படத்திற்கு பின் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது 1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போரட்டம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. அமரன் படம் துவங்குவதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு தொடர்ந்து வந்த நிலையில் ஹிந்தியில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கப்போனார் ஏ.ஆர்.முருகதாஸ்.
மதராஸி: மார்ச் மாதம் அந்த படம் முடிந்து மீண்டும் அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க வருவார் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பழைய படங்களின் தலைப்பு செண்டிமெண்ட்டாக பயன்படுத்தும் வரிசையில் இதுவும் 2006ம் வருடம் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு இது.
மதராஸி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்க வேண்டியிருக்கிறதாம். 12 நாட்களில் அந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு இசை அனிருத். பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார். படம் முடிந்த பின் பின்னணி இசையை அவர் செய்வார் என்கிறார்கள். இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்கிறது படக்குழு. துப்பாக்கி படத்தில் வில்லனாக வந்த வித்யூத் ஜம்வால்தான் இந்த படத்திற்கும் வில்லன்.
சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. வீடியோவை பார்க்கும்போது விஜய்க்கு துப்பாக்கி போல சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் அமையும் என கணிக்கப்படுகிறது.