ரஜினியின் உடல்நிலை எப்படி இருக்கு?.. மருத்துவமனையில் நடப்பது என்ன?....
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 73 வயதை கடந்த நிலையிலும் தற்போது வரை சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இளம் நடிகர்களுக்கு சரிக்கு சமமாக சுறுசுறுப்பாக நடித்து வருவதை பார்த்து பலரும் ஆச்சர்யப்படுவார்கள்.
கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதேபோல் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அமிதாபச்சன், பகத்பாஸில், மஞ்சு வாரியார், அபிராமி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படி வேட்டையன் படத்தின் ப்ரோமோஷன், மற்றொருபுறம் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று பிஸியாக இருந்து வரும் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதலில் வயிறு தொடர்பான பிரச்சனைக்காக அதாவது செரிமான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அது மட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா? என்பது குறித்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாம். மேலும் இருதவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.
இசிஜி. எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவ குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. உடல் பரிசோதனைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கின்றார்.