12 வருட கேப்ல மதகஜராஜாவில் நடந்திருக்கும் மாற்றங்கள்.. ஒன்னு மட்டும் மாறவே இல்லையாம்!..
மதகஜராஜா: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மதகஜராஜா திரைப்படத்தை படக்குழுவினர் தற்போது தூசி தட்டி எடுத்து இந்த பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மதகஜராஜா.
இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்திருந்த நிலையில் படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. அதற்கு முக்கிய காரணம் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் அந்த சமயத்தில் தயாரித்திருந்த அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தது.
இதனால் அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் நடிகர் விஷால் கூட இப்படத்தை தானே முன்வந்து வெளியிடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி 2015 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அப்போதும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வருடங்கள் கழித்து இந்த படம் ரிலீஸ்-ஆக இருப்பதால் விரைவில் படக்குழுவினர் புதிய ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக சுந்தர் சி யின் திரைப்படங்கள் என்றாலே அதில் எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவருக்கு உண்டான ஸ்டைலில் ஒரு காமெடி கலாட்டாவாக கமர்சியல் திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் தொடர்ந்து அப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் செய்யப்பட்ட புரமோஷன் வீடியோக்கள் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றது. அதாவது இப்படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரின் காமெடியை திரையில் பார்க்க இருக்கின்றோம்.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனு மோகன் ஆகியோர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்கள் யாருமே தற்போது உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அவர் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்படி பல மாற்றங்கள் இப்படத்திற்கு பிறகு அரங்கேறி இருக்கின்றது. இருப்பினும் இதில் ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கின்றது. அப்போது முதல் இப்போது வரை நடிகர் விஷால் மட்டுமே சிங்கிளாக சுற்றி வருகின்றார். இது மட்டுமே ஒரு ஒற்றுமையாக பார்க்கப்படுகின்றது என்று சமூக வலைதள பக்கங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.