விஜயகாந்த் சொன்ன ஒரே வார்த்தைக்காக மாதந்தோறும் பென்ஷன்... ஐசரி கணேஷின் அசத்தல் திட்டம்!

சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ். பச்சையப்பா அறக்கட்டளைக் குழுவிற்கும் இவர் தான் தலைவர். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் இருக்கிறார்.
இவர் தமிழ்த்திரை உலகில் ஒரு சிறந்த தயாரிப்பாளர். தேவி, போகன், கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு, மூக்குத்தி அம்மன் உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளார். நடிகராக எங்கேயும் காதல், துள்ளுவதோ இளமை, டபுள்ஸ், 2.0 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது திரையுலகப் பயணத்தில் கேப்டன் விஜயகாந்த் எந்தளவுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் என்பதைப் பற்றி ரத்தினச்சுருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அந்த விஷயம் என்ன? அதை இன்றுவரை ஐசரி கணேஷ் கடைபிடித்து வருகிறார் என்பது பாராட்டுதலுக்குரியது. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

நடிகர் சங்க தலைவரா விஜயகாந்த் சார் இருக்கும்போது என்னைக் கூப்பிட்டு 'கணேசா நிறைய சிறு நடிகர்கள் எல்லாம் கஷ்டப்படுறாங்க. நீ அவங்களுக்கு பென்ஷன் கொடு'ன்னு சொன்னாரு. 'கண்டிப்பா தரேன் சார்'னு சொன்னேன். அன்னைக்கு 100 பேர்ல ஆரம்பிச்சேன். இன்னைக்கு 450 பேருக்கு மேல மாதந்தோறும் பென்ஷன் கொடுத்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் விஜயகாந்த் சார்தான் என்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது கூட அவரைப் பற்றி பல செய்திகள் வரவில்லை. அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கும்போதுதான் அவரைப் பற்றி தினமும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எவ்வளவு நல்ல விஷயங்களை மனுஷன் சத்தம் காட்டாம செய்துள்ளார் என்று நம்மையே வியக்க வைக்கிறார் கேப்டன். 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற வரிகள் எம்ஜிஆருக்குப் பிறகு இவருக்குத் தான் பொருந்துகிறது.