Jailer2: ஜெயிலர் 2-வில் இணைந்த அந்த நடிகர்!.. இனிமேதான் சம்பவமே!.. ஷூட்டிங் அப்டேட்!...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடிக்க, மலையாள நடிகர் விநாயக் வில்லனாக அசத்தியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 600 கோடி வரை வசூல் செய்தது. ரஜினியின் மார்க்கெட் இறங்கியிருந்த நிலையில் ஜெயிலர் அதை காப்பாற்றியது. இந்த படத்திற்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரஜினி மாறினார்.
அதன்பின் வேட்டையன், கூலி ஆகிய இரண்டு படங்களில் நடித்த ரஜினி தற்போது மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் கோவாவில் துவங்குகிறது.
இங்குதான் படத்தின் முக்கியமான காட்சிகளை நெல்சன் எடுக்கப் போகிறாராம். படத்தின் வில்லன் எஸ்.ஜே சூர்யா, ரஜினி ஆகியோருக்கு இடையேயான முக்கிய காட்சிகளை இங்கே படம்பிடிக்க திட்டமிட்டுருக்கிறார்கள். முக்கியமான ஆக்சன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளை கடலோர பகுதிகளில் எடுக்கவிருக்கிறார்கள். ஏற்கனவே டாக்டர் படத்தை இயக்கிய போது ஆக்சன் காட்சிகளை இதே கோவாவில்தான் எடுத்திருந்தார் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறவிருக்கிறது. ஜெயிலர் 2 புரமோ வீடியோவில் ரசிகர்கள் பார்த்த காட்சிகளும் இங்குதான் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லன்களில் ஒருவராக நடிக்கவிருக்கிறார். அவர் கோவாவில் நடக்கவுள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். அவரின் மூத்த மகளாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். ஜெயிலர் படத்தில் தனது மகனை வைத்து பிளாக்மெயில் செய்யும் வில்லனோடு ரஜினி மோதுவார். தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்தில் அதைவிட பெரிய பிரச்சனைகளை கடத்தல் கும்பலிடமிருந்து சந்திக்க நேரும் போது ரஜினி என்ன செய்கிறார் என்பதைத்தான் ஜெயிலர் 2 படத்தின் கதையாக எழுதி இருக்கிறார்கள்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளும், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த படத்தில் சிவ்ராஜ்குமார், மோகன்லால், மற்றும் தெலுங்கு நடிகர் பாலையா ஆகியோர் கேமியோ வேடத்தில் நடிப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. அதன்பின் ரஜினி சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
