Jananayagan: பகவந்த் கேசரி இல்ல!.. ஜனநாயகன் கதையே வேற!.. என்னடா புதுசா சொல்றீங்க!...

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கி விட்டார். ஆனால் அவர் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறி 41 பேர் வரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த பல நாட்களாகவே சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தால் கடந்த இரண்டு வாரங்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த தவெக தலைவர் விஜய் தற்போது வெளியே வர துவங்கியிருக்கிறார். அதோடு இன்று அவர் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வேலைகள் என்றோ முடிந்து விட்டது. ஆனாலும் பொங்கல் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபு தியோல் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.
இந்த படம் பற்றிய செய்தி வெளியான போதே தெலுங்கில் ரசிகர்களால் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது. அதை நிரூபிப்பது போல பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரகெஷன் வாங்கியது.
அதேநேரம், இந்த படத்தில் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி வேறு மாதிரியான எண்ணத்தை உருவாக்கியது. ஏனெனில் விஜய் தொண்டர்களுக்கு நடுவில் செல்பி எடுப்பது போலவும், கையில் சாட்டை வைத்துக்கொண்டு சுழற்றுவது போலவும் அந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. பகவத் கேசரி அரசியல் படம் இல்லை. அப்படியென்றால் ‘இது வேறு கதையா?’ என ரசிகர்கள் குழம்பினார்கள்.
சிலரோ பகவத் கேசரி கதைதான். ஆனால் விஜய்க்கும், அவரின் அரசியல் எண்ட்ரிக்கும் ஏற்றமாதிரி கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். அதிலும் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் அரசியல் தொடர்பான காட்சிகளை இந்த படத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
இந்நிலையில் ஜனநாயகன் கதை பற்றி ஒரு புதுத்தகவல் கசிந்திருக்கிறது. படத்தில் போலீஸ் வேடத்தில் வரும் விஜய் ஒரு கட்டத்தில் அரசியல்வாதியாக மாறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறுவது போலவும் கதை எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு மலையாள சினிமா நடிகர் சுரேஷ்கோபி நடித்த ஜனாதிபதியம் படத்தின் கதையும் ஜனநாயகன் படத்தின் கதையும் ஒன்றுதான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. உண்மையில் ஜனநாயகன் எந்த படத்தின் ரீமேக் என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.