ஜானி மாஸ்டர்க்கு ஜாமீன்.. இதெல்லாம் ஒரு காரணமா? கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடன இயக்குனராக பணியாற்றி வந்த ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் பாலியல் பலாத்கார குற்றம் சுமத்திய நிலையில், ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தனிப்படை போலீஸார் தேடிப் பிடித்து கைது செய்து சிறையில் தள்ளினர்.
மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தார் ஜானி மாஸ்டர் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. ஜாமீனில் வெளியே வரமுடியாது என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய விருது விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விருது வாங்குவதற்காக அவருக்கு சிறப்பு பர்மிஷன் கொடுக்கப்பட்டு அக்டோபர்6 முதல் 10ம் தேதி வரை அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது ரங்கா ரெட்டி நீதிமன்றம். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதை காரணம் காட்டி ஜானி மாஸ்டரின் வழக்கறிஞர் வாதாடி அவருக்கு ஜாமீனை பெற்று தந்திருக்கிறார். போக்சோ சட்டத்தில் கைதான நபருக்கு தேசிய விருது வழங்கப்படுவதே ஒரு கேலியான விஷயம் என்றும் அதற்கு ஜாமீனை வேறு நீதிமன்றம் வழங்கியிருப்பதை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இல்ல புரியல என டாக்டர் படத்தின் மாகாளி மீம்ஸ் எல்லாம் போட்டு ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் கொடுத்த விவகாரத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமதி ஹபிபோ, வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமைத்தவர் தான் ஜானி மாஸ்டர். புட்ட பொம்மா பாடல் படப்பிடிப்பின் போது கூட ஜானி மாஸ்டர் தன்னை கெடுத்ததாக அவரது உதவியாளராக இருந்த பெண் நடன இயக்குநர் சமீபத்தில் ஜானி மாஸ்டருக்கு எதிராக பலாத்கார புகார் அளித்த நிலையில், அப்போது மைனராக இருந்த பெண்ணையே ஜானி மாஸ்டர் பலாத்காரம் செய்துள்ளார் என்பதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.