வசூலை அள்ளும் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா!.. 2 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?..

தெலுங்கு திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவது என்பது 90களிலேயே துவங்கிவிட்டது. விஜயசாந்தி நடிப்பில் தெலுங்கில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் தமிழ்நாட்டில் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்திற்கு பின் விஜயசாந்தி போலீசாக நடித்த எல்லா படங்களுமே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

அதேபோல், ராஜசேகர் நடிப்பில் வெளியான இதுதாண்டா போலீஸ் உள்ளிட்ட பல டப்பிங் படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. மேலும், நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளிவந்தது.

இவர்கள் எல்லாவற்றையும் தாண்டி சிரஞ்சீவியின் படங்களுக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. இது இப்போதும் தொடர்கிறது. இப்போது பிரபாஸ், மகேஷ் பாபு, விஜய தேவரகொண்டா, அல்லு அர்ஜூன், ராம் சரண் ஆகியோரின் படங்களும் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.

devara

இப்போது இந்த வரிசையில் ஜுனியர் என்.டி.ஆரும் இணைந்திருக்கிறார். அவரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. தமிழகத்தில் இப்படத்திற்கு கணிசமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டது.

இந்த படம் வெளியானதால் கார்த்தியின் நேரடி தமிழ்ப்படமான மெய்யழகன் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை. ஆந்திராவில் தேவரா படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. தமிழகத்திலும் இந்த படம் ஓரளவுக்கு வசூலை பெற்று வருகிறது. படத்தில் சில குறைகள் இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தேவரா படம் வெளியாகி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 243 கோடி வரை வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it