தியேட்டரில் பல்பு வாங்கிய இந்தியன் 2!.. ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3?..
Indian 3: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படமெடுக்கும் பெரிய இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் பல படங்கள் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ஆனால், 1996ம் வருடம் வெளிவந்த இந்தியன் படத்தில் 2ம் பாகம் போல வெளிவந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கமலும், சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். எஸ்.ஜே.சூர்யாவும் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால், இந்தியன் 2-வுக்கோ அனிருத் இசையமைத்திருந்தார்.
லைக்கா நிறுவனம் அதிக பட்ஜெட்டில் இப்ப்டத்தை உருவாக்கியது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதோடு, சமூகவலைத்தளங்களில் இந்தியன் 2 ட்ரோலில் சிக்கியது. ரசிகர்கள் இப்படத்தை கலாய்த்து தள்ளிவிட்டனர்.
எனவே, இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தியன் 2 படம் உருவானபோது இந்தியன் 3 படத்தின் காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். மேலும், இந்தியன் 2 பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல் ‘இந்தியன் 3 படத்திற்காகத்தான் நான் இந்தியன் 2-வில் நடிக்க ஒப்புக்கொண்டேன்’ எனவும் சொல்லி ஹைப் ஏற்றினார்.
இப்போது இந்தியன் 2 படம் ஓடாத நிலையில் இந்தியன் 3 படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்காது என்பதால் ஓடிடியில் தள்ளிவிடலாம் என நினைக்கிறதாம் லைக்கா. அதாவது, இந்தியன் 3 படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரிடையாக ஓடிடியில் ப்ரீமியர் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் சொல்லும் தொகை லைக்காவிற்கு ஒத்து வந்தால் இந்தியன் 3 படம் தியேட்டரில் வெளியாகாது என்றே கணிக்கலாம். ஒருவேளை நெட்பிளிக்ஸ் மிகவும் குறைவான விலைக்கு கேட்டால் இந்தியன் 3 படம் தியேட்டரில் வெளியாகவும் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.