மன உளைச்சல்ல குடிச்சேன்!. என்னை மீட்டது அவர்தான்!. கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி!...
Karthik Subbaraj : கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கைத்தட்டலை வாங்கியவர் கார்த்திக் சுப்பாராஜ். சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்திக் சினிமா மீது கொண்ட ஆசையில் குறும்படங்களை எடுக்க துவங்கினார். அதன்பின்னர் பீட்சா படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும் நடித்திருந்தார். ஹாரர் திரில்லராக வெளிவந்த இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தின் இறுதியில் வந்த டிவிஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதன்பின் 2 வருடங்கள் கழித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படம்தான் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை ரஜினியே பாராட்டியிருந்தார். கார்த்திக் சுப்பாராஜ் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்தது.
கார்த்திக் இயக்கிய இறைவி படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய படம்தான் பேட்ட. ரஜினி, விஜய் சேதுபதி, சசிக்குமார், திரிஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் பல படங்களில் ரஜினியிடம் கார்த்திக் எதையெல்லாம் ரசித்தாரோ அது எல்லாவற்றையும் படத்தில் வைத்தார்.
அதன்பின் விக்ரமை வைத்து மகான், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸை வைத்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை இயக்கினார். இப்போது சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான சூர்யாவை ரசிகர்கள் பார்க்கவிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பாராஜ் ‘நாளை இயக்குனர் முடிஞ்சதும் எனக்கு படம் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனால், அது நடக்கல. என் மனைவி சத்யா அப்போதுதான் மெடிசன் முடித்துவிட்டு ஒரு டாக்டரிடம் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. சென்னையில் ஒரு சிங்கிள் பெட் ரூமை வாடகைக்கு எடுத்தோம். சத்யாவை காலையில் டிராப் செய்துவிட்டு நான் தயாரிப்பாளரை தேடி அலைவேன். 2 வருடங்கள் இப்படி போச்சி.
பீட்சா பட வாய்ப்பு கிடைச்ச அப்புறமும் நிலைமை மொத்தமா மாறிடல. அடுத்த பட வாய்ப்பு, வேலைகள் என நான் உச்சக்கட்ட மன அழுத்தத்திற்குள் போய் குடிக்கவும் துவங்கிவிட்டேன். அதில் இருந்து என்னை மீட்டு, பாசிட்டிவாக மாற்றி இப்போதுவரை என்னை வழிநடத்துவது என் சத்யாதான். என் நிஜமாகவும், நிழலாகவும் இருப்பது என் மனைவிதான்’ என உருகியிருக்கிறார். சத்யா கார்த்திக் இயக்கிய சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.