குளிக்காம.. தூங்காம.. ரெண்டு வருஷம் ஓடிப்போச்சி!.. கூலிக்காக லோகேஷ் பட்ட பாடு!...

Coolie: 5 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்லாமே இளம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. லோகேஷ் கதை சொல்லும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறியிருக்கிறது.
கேங்ஸ்டர்கள் இயங்கும் இருண்ட உலகமே லோகேஷின் கதைக்களமாக இருக்கிறது. எனவே, இது போன்ற கதைகளும், அதில் வரும் கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. அவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் மற்ற படங்களிலும் வருவதை ரசிகர்கள் எல்.சி.யூ (Lokesh Cinematic Universe) என சொல்கிறார்கள்.
இவர் இயக்கிய விக்ரம் படம் கமல் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பின் கமலே பரிசோதனை முயற்சிகளை விட்டுவிட்டு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறிவிட்டார். அதேபோல், விஜயை வைத்து இவர் இயக்கிய மாஸ்டர், லியோ போன்ற படங்கள் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படமாக இருக்கிறது.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
ஜெயிலர் படத்திற்கு பின் இப்படம் ரஜினிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைவதோடு 1000 கோடி வசூலை தொடும் முதல் நேரடி தமிழ்ப்படமாக கூலி இருக்கும் எனவும் சிலர் சொல்கிறார்கள். வருகிற ஆகஸ்டு 14ம் தேதி கூலி படம் வெளியாகவுள்ளது. லோகேஷின் லியோ படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘ என்னுடைய 36,37 இரண்டு வயதையும் கூலி படம் எடுத்துக்கொண்டது. கடந்த 2 வருடங்களாக கூலி படத்திற்காக முழு உழைப்பையும் போட்டிருக்கிறேன். குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ளவில்லை’ என பேசியிருக்கிறார். அதேபோல், கூலி படத்தில் பணிபுரிந்தவர்கள் கூறும்போது ‘லோகேஷ் அசுர உழைப்பை போட்டிருக்கிறார். சில நேரங்களில் 2 நாட்கள் அவர் குளிக்காமல், சரியாக தூங்காமல், சாப்பிடாமல் கூட வேலை செய்து கொண்டிருப்பார்’ என சொல்லியிருக்கிறார்கள்.