லியோவுக்கு முன்னாடி லோகேஷ் இயக்க ஆசைப்பட்ட திரைப்படம்!. கேட்டாலே தலை சுத்துது!...
Lokesh kanagaraj: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். பல மொழி திரைப்படங்களையும் பார்த்து வளர்ந்தவர் என்பதால் ஹாலிவுட் தரத்திற்கு தமிழ் சினிமாவை உயர்த்த வேண்டும் என ஆசைப்படும் இயக்குனர் அவர். அதனால்தான், ஆங்கில, கொரிய, ஐரோப்பிய படங்களில் இருப்பது போல வன்முறை காட்சிகள் அவரின் படத்தில் அதிகம் காணப்படுகிறது.
ஒரு இரவில் நடிக்கும் கதைதான் மாநகரம். கைதி படத்தின் கதையும் அப்படித்தான். ஒரு இரவில் நடக்கிறது என்றாலும் வித்தியாசமான கதைக்களங்களை பிடித்து நெருப்பின் மீது நிற்பது போல திரைக்கதை அமைத்து அசத்தும் கலை லோகேஷுக்கு நன்றாகவே கை வருகிறது.
கைதி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் விஜயின் மாஸ்டர், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜயை வைத்து லியோ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். லியோ படம் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் 3 திரைப்படங்களுமே நல்ல வசூலை பெற்றது.
இதில், விக்ரம் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு லோகேஷ் அமைத்திருந்த திரைக்கதையை இயக்குனர்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். கமலின் கேரியரில் விக்ரம் திரைப்படமே அதிக வசூலை பெற்ற படமாக அமைந்தது.
லோகேஷ் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன்பின் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் என பல படங்களை இயக்கவிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த மனோஜ் பரமஹம்சா ஒரு முக்கிய தகவலை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
லியோவுக்கு முன்பே லோகேஷ் ஒரு கதையை இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்த ஆசைப்பட்டார். அந்த கதை உலக தரத்தில் இருந்தது. அவர் எப்படி அப்படி ஒரு கதையை யோசித்தார் என்றே தெரியவில்லை. கண்டிப்பாக அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும். வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்திற்கு அதில் நிறைய வேலை இருந்தது.
எல்லா மொழி நடிகர்களையும் அதில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், லியோ படத்தை 6 மாதத்தில் முடித்து கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் நிர்பந்தம் செய்தால் அந்த கதையை அவர் இயக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக அந்த கதையை லோகேஷ் படமாக எடுப்பார்’ என சொல்லி இருக்கிறார்.