Lokesh: ரஜினியும் இல்ல.. பிரபாஸும் இல்ல!.. லோகேஷின் புதிய பட அப்டேட்!...

கோலிவுட்டில் மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதிலும் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் அவரை கோலிவுட்டில் பெரிய இயக்குனராக மாற்றி விட்டது ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி திரைப்படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கினார் லோகேஷ்.
விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கியதால் விஜய் ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறினார். அதேநேரம் லியோ படத்தின் இரண்டாம் பாதியும், கூலி படமும் ரசிகர்களை கவரவில்லை.
லியோவையும், கூலியும் லோகேஷ் இன்னும் சிறப்பாக எடுத்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் இருந்தது. லியோவில் தான் செய்த தவறை ஏற்றுக்கொண்ட லோகேஷ் கூலியில் அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. பட ரிலீஸுக்கு முன் ‘கூலி 1000 கோடி வசூல் செய்ய வேண்டும் என நான் பார்க்கவில்லை. 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்திப்படுத்த வேண்டும்.. அவ்வளவுதான்’ என பேசியவர், ரிலீஸுக்கு பின் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த பின் ‘எல்லோருக்கும் பிடித்த மாதிரி என்னால் படம் எடுக்க முடியாது’ என சொல்லி எஸ்கேப் ஆனார்.
ஒருபக்கம் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கப் போகும் புதிய படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்கிற செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என ரஜினி சொல்லி சந்தேகத்தையும் கிளப்பினார்.
ஒருபக்கம் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது. மேலும் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என் புரடெக்சன் நிறுவனம் தயாரிப்பில் பிரபாஸ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை லோகேஷ் இயக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்தது. எனவே லோகேஷ் எதைத்தான் செய்யப் போகிறார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், லோகேஷ் முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கப் போவது உறுதியாகியிருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடக்கவிருக்கிறது. விரைவில் இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகும். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குவாரா? இல்லை ஆந்திரா பக்கம் போய் பிரபாஸ் - பவன் கல்யாண் படத்தை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.