அமரன்ல பாதி கூட இல்லயே!.. சிவகார்த்திகேயனை அப்செட் ஆக்கிய மதராஸி பிஸ்னஸ்!..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவுக்கு போனவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய கால கட்டத்திலேயே சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு சீனியர் நடிகர்களே பொறாமைப்பட்டார்கள். துவக்கத்தில் காமெடி கலந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்தார்.
இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. சில படங்களை சொந்தமாக தயாரித்து கையையும் சுட்டுக்கொண்டார். இதனால் 75 கோடி கடன் அவரின் தலையில் விழுந்தது. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி இப்போதுதான் அதிலிருந்து மீண்டிருக்கிறார்.
இப்போது சீரியஸான கதைகளில் நடிக்க துவங்கிவிட்டார். அப்படி அவர் நடித்து வெளியான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்துவிட்டது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் பயோபிக் போல இப்படத்தை உருவாக்கியிருந்தார்கள்.
அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்னரே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் பாதி முடிந்த நிலையில் அமரன் படத்தில் நடிக்கப்போனார். ஏனெனில், முருகதாஸ் பாலிவுட்டுக்கு சென்று சல்மான்கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்க துவங்கினார். அந்த படம் முடிந்த பின் மீண்டும் மதராஸி பட ஷூட்டிங் துவங்கவுள்ளது.
சிவகார்த்திகேயன் இப்போது சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது 1964ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை ஆகும். இந்த படத்தில் அதர்வா, ஜெயம் ரவி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்கள்.
இந்நிலையில்தான் மதராஸி படத்தின் ஓடிடி உரிமை 23 கோடிக்கு விலை போயிருக்கிறது. இது தயாரிப்பாளருக்கு சந்தோஷம் என்றாலும் சிவகார்த்திகேயனை அப்செட் ஆக்கியிருக்கிறது. ஏனெனில் அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமை 60 கோடிக்கு விற்பனை ஆனது. இதை வைத்து தனது சம்பளத்தை உயர்த்தலாம் என சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருந்தார். ஆனால், மதராஸி 23 கோடிக்கு மட்டுமே விலை போயிருக்கிறது. ஆனாலும், 300 கோடி வசூலை காட்டி தனது சம்பளத்தை எஸ்.கே ஏற்றிவிட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.