26 படங்கள் மட்டுமே ஹிட்!.. 2024-ல் பல நூறு கோடி நஷ்டம்!.. மீண்டு வருமா மல்லுவுட்?!...
Malluwood: ஒவ்வொரு திரைப்படத்தையும் அது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இயக்குனர் எடுக்கிறார். தயாரிப்பாளரும் பணம் போடுகிறார். பல தொழில்நுட்ப கலைஞர்களும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். ஆனால், எல்லா படங்களும் வெற்றி பெறுகிறுதா என்றால் இல்லை.
தமிழகத்திலாவது கமர்ஷியல் மசாலா படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால், மலையாளத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்குகிறார்கள். இயல்பான நடிப்பை கொடுக்கும் பல நடிகர்கள் அங்கே இருக்கிறார்கள். இந்திய சினிமா உலகில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என்றாலே எல்லோரும் மலையாள சினிமாவை கை காட்டுகிறார்கள்.
சில மலையாள படங்களை பார்த்துவிட்டு தமிழில் இப்படி ஒரு கதையை ஒரு இயக்குனர் யோசிக்க முடியுமா? அப்படியே யோசித்தாலும் அதில் நடிக்கும் நடிகர் கிடைப்பாரா?.. அப்படியே ஒரு நடிகர், ஒரு தயாரிப்பாளர் கிடைத்து படத்தை எடுத்தால் படம் ஓடுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஏனெனில், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை என்பது முற்றிலும் வேறானது. ஜமா படத்தின் தோல்வியையே அதற்கு முக்கிய உதாரணமாக சொல்ல முடியும்.
அதனால்தான், மலையாள படத்தை தமிழ் சினிமா ரசிகர்களும் சிலாகித்து பேசுகிறார்கள். பஹத் பாசில், பிஜி மேனன், அசீப் அலி, டோவினோ தாமஸ், ஷைன் டாம் சாக்கோ, ஊர்வசி, பார்வதி போன்ற பல அற்புதமான நடிகர், நடிகைகள் அங்கே இருக்கிறார்கள். மலையாளத்தில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படத்தை பலரும் பாராட்டி எழுதினார்கள்.
பஹத் பாசிலின் ஆவேசம் படத்தை தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள். சில வருடங்களுக்கு முன்பு வந்த டிரான்ஸ் படத்தை பற்றியும் பலரும் எழுதினார்கள். மலையாளத்தில் உருவாகி மலையாளத்திலேயே வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் தமிழ்நாட்டில் பல கோடிகளை அள்ளியது.
அதேநேரம், 2024 சேட்டன்களுக்கு சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். 2024ம் வருடம் மலையாளத்தில் உருவான 199 திரைப்படங்களில் 26 படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை பெற்றது. மற்ற படங்களில் எல்லாம் தோல்விதான். இந்த படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி என சொல்லும் நிலையில் இவற்றால் கிடைத்த லாபம் வெறும் 350 கோடி மட்டுமே என்கிறார்கள். 2024ம் வருடம் மலையாள சினிமாவுக்கு 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.