Bison: அந்த பைசனே நீதான்!.. மாரி செல்வராஜுக்கு மெசேஜ் அனுப்பிய மணிரத்னம்
பரியேறும் பெருமாள் கர்ணன், மாமன்னன் என கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் விக்ரம் துருவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பைசன் காளமாடன். தீபாவளி காரணமாக இந்த திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. மாரி செல்வராஜ் சாதிய படங்களை எடுக்கிறார் என்கிற விமர்சனம் அவர்கள் மீதுள்ள நிலையில் பைசன் திரைப்படம் மக்களின் ஒற்றுமையை பற்றி பேசி இருந்தது.
இந்த படத்தில் இரு சாதி தலைவர்கள் பற்றிய காட்சிகள் வந்தாலும் அவர்கள் இருவருமே நல்லவர்கள் போலவும், அவர்களின் பின்னணி.. அவர்கள் ஏன் தலைவர்களாக மாறினார்கள்? ஏன் வன்முறையை கையில் எடுத்தார்கள்? என்பது பற்றிய காட்சிகளும் இருந்தது. ஒருபக்கம் தமிழ்நாடு கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களின் நினைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் மாரி செல்வராஜ்.
துவக்கம் முதலே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. அதனால் படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 55 கோடி வசூல் செய்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் பைசன் பட இயக்குனர் மாரி செல்வராஜை இயக்குனர் மணிரத்தினம் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜிற்கு அவர் அனுப்பியுள்ள வாட்ஸப் செய்தியில் ‘ஹாய் மாரி.. இப்போதுதான் படம் பார்த்தேன்.. மிகவும் பிடித்திருந்தது.. நீங்கள்தான் அந்த பைசன்.. உங்களை பார்த்து பெருமை கொள்கிறேன்.. தொடர்ந்து திரைப்படங்களை எடுங்கள்.. இந்த குரல் முக்கியமானது’ என குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த செய்தியை அப்படியே மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘பரியேறும் பெருமாள் துவங்க்கி என் படைப்புகள் எல்லாவற்றையும் பார்த்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும்... எப்போதும் சார்’ என நெகிழ்ந்திருக்கிறார்.
