கார்த்திகாவுக்கு ஒரு லட்சம் பரிசு!.. 100 பவுன் தங்கம்!.. மன்சூர் அலிகான் அதிரடி.....
பஹ்ரைனில் சமீபத்தில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியா மகளிர் கபடி தங்கம் வென்றது. இந்த அணியில் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர் முக்கிய காரனமாக இருந்தார். எனவே அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் கண்ணகி நகருக்கு சென்று கார்த்திகாவுக்கு சில லட்சங்கள் பரிசு கொடுத்தார். மேலும், பைசன் பட ஹீரோ நடித்த துருவ் விக்ரம் கார்த்திகாவை தனது வீட்டிற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்து அன்பளிப்பு கொடுத்தார். கார்த்திகாவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து சொன்னார்கள்.
இறுதிப்போட்டியில் ஈராக் அணியை 75-21 என்கிற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. எனவே கார்த்திகாவுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக 25 லட்சம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
பல திரைப் பிரபலங்களும் கார்த்திகாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று கண்ணகி நகருக்கு சென்று கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுத்தார். மேலும் ‘ஒலிம்பிக் போட்டியில் நீ வெற்றி பெற்றால் உன் திருமணத்திற்கு நான் 100 பவுன் தங்கம் போடுவேன்’ என வாக்குறுதி கொடுத்திருக்கிறார் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் ‘கார்த்திகாவுக்கு தமிழக அரசு 10 கோடி கொடுக்க வேண்டும். அரசு சார்பில் வீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.
