D56: சரித்திர கதை!.. பல நாடுகளில் ஷூட்டிங்!.. தனுஷ் படம் பற்றி ஹைப் ஏத்தும் மாரி செல்வராஜ்!..
பரியேறும் பெருமாள் கர்ணன், மாமன்னன், பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கி சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தனது படங்களில் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் இவர் மீது கடுமையான விமர்சனங்களை சாதிய உணர்வாளர்கள், சாதி ஆதரவாளர்கள் வைத்தாலும் அவர் தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை.
என் சமூக மக்கள் சந்தித்த வலிகளை நான் தொடர்ந்து பேசுவேன். என் அப்பா, என் தாத்தா கதைகளை படமாக எடுப்பேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் சாதிய படங்களை எடுக்கவில்லை. சாதிக்கு எதிரான படங்களை எடுத்து வருகிறேன். மாரி சாதிக்கு எதிரானவன் என்கிற முத்திரை என் மீது குத்தப்படும். அதைத்தான் நான் விரும்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படமும் விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றது. ரசிகர்களின் ஆதரவால் படம் வெளியாகி 10 நாட்களில் இப்படம் 55 கோடி வரை வசூல் செய்தது. 10 நாட்களை தாண்டியும் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. பைசனுக்கு பின் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார்.
இது தனுஷின் 56வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘நான் இதுவரை இயக்கிய படங்களை விட இந்த படம் பெரிய ரேஞ்சில் இருக்கும். பல நாடுகளிலும் ஷூட்டிங் நடக்கவுள்ளது. படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இது ஒரு சரித்திர கதை’ என தெரிவித்திருக்கிறார்.
